அம்பாந்தோட்டையைச் சேர்ந்த பசில் ராஜபக்ச கம்பகாவில் போட்டியிட முடியுமானால், விக்னேஸ்வரன் ஏன் யாழ்ப்பாணத்தில் போட்டியிட முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
தமிழ் மக்களால் நேசிக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதன்மை வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் ஜனநாயக உரிமையும், சக்தியும் உள்ளது.
எமது வேட்பாளர் குறித்து குறை கூறுவதற்கு சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எந்த அருகதையும் கிடையாது.
வடக்கு, கிழக்கு மக்களால் மிகவும் நேசிக்கப்படும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன், முதன்மை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, எந்தவித அவமானமும் ஏற்படவில்லை.
தமிழ் மக்கள் மத்தியில் இந்தவிதமான பிரதேசவாதங்கள் ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.
விக்னேஸ்வரனை நாம் வடக்கு மாகாணசபைக்கான முதன்மை வேட்பாளராக நிறுத்தியுள்ளது, பலரையும் அச்சமடையச் செய்துள்ளது.
விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் தான்.
அவருக்கு சொந்தமான காணிகள், நிலங்கள் வடக்கு மாகாணத்தில் உள்ளன.
அத்துடன், வடக்கில் நீண்டகாலம் நீதிவானாகவும் பணியாற்றியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களின் மொழி, கலை, கலாசார, பண்புகள் தொடர்பான மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டவர்.
வடக்கு, கிழக்கு மக்களின் அபிலாசைகளை நன்கு உணர்ந்தவர்.
அனைவராலும் பொருத்தமான ஒருவர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர். நீதிவழுவாத தீர்க்க தரிசனம் மிக்கவர்.
அத்தகைய ஒருவரை நாம் வடக்கு மாகாணசபையின் முதன்மை வேட்பாளராக நிறுத்தியுள்ளமை, வடபகுதி மக்களுக்கு மட்டுமன்றி, அனைத்துத் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும்.
எமது தெரிவை விமர்சிக்க சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எந்த உரிமையும் கிடையாது.
தமிழ் மக்கள் எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கமே இருக்கின்றனர்.
அதேபோன்று தமிழ் மக்களின் அபிலாசைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்கு உணர்ந்து வைத்துள்ளது.
இன்றைய சூழ்நிலையில் விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் அனைவரது கவனமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் திரும்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வடக்கைச் சேர்ந்தவர் அல்லாத ஒருவரை வடக்கு மாகாணசபையின் முதன்மை வேட்பாளராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்துள்ளதன் மூலம், வடக்கு மக்களை அவமானப்படுத்தி விட்டதாக, சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment