Latest News

July 28, 2013

நட்டத்தில் இயங்கும் மிஹின் லங்கா புதிய விமானங்கள் கொள்வனவு?
by admin - 0

நட்டத்தில் இயங்கி வரும் இலங்கை அரசிற்கு சொந்தமான மிஹின் லங்கா விமான சேவையானது புதிய விமானங்கள் 3ஐ கொள்வனவு செய்யும் பொருட்டு திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் போயிங் விமானமொன்றை குத்தகைக்கு பெறும் திட்டமும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச விமானசேவை நிறுவனங்களுடனான போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தமக்கு புதிய விமானங்கள் தேவைப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கான நிதியைப் பெறும் பொருட்டு  திறைசேரியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இதற்கு எவ்வளவு தொகை தேவைப்படுகின்றது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

அண்மையில் வெளியிடப்பட்ட அரசாங்க பொது முயற்சிகள் பற்றி ஆராயும் பாராளுமன்றக் குழு (கோப்)அறிக்கையின்  படி மிஹின் லங்கா பெரும் நட்டம் அடைந்து வருகின்றமை உறுதியாகியுள்ளது.

கோப் அறிக்கையின் படி அந்நிறுவனமானது 2009, 2010,2011 ஆகிய வருடங்களில் முறையே 1300 மில்லியன் ரூபா, 1221 மில்லியன் ரூபா , 940 மில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது.
இதுமாத்திரமன்றி அதன் இயக்குனர்களுக்கான கட்டணத்தையும் இரு மடங்காக அதிகரித்திருப்பதாக அவதானிகள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை டுவிட்டர் சமூகவலையமைப்பில் சிலரின் கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க மிஹின் லங்கா நட்டத்தில் இயங்குவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆதரவாக பதிலளித்திருந்தார்.

« PREV
NEXT »

No comments