யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி தமிழ் மக்கள் இன்னமும் அவர்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாமல் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டவர்கள், அநாதைகளாக்கப்பட்ட சிறுவர்கள், குழந்தைகள், அங்கவீனமடைந்தவர்கள் என பெருமளவானோர் அடிப்படை வசதிகள் கூட இன்றி அல்லல்படுகின்றனர். வடக்கு மாகாணசபை அமைந்ததும் இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு மாகாணசபைக்கு நிதியுதவி வழங்க யு.எஸ்.எயிட் நிறுவனம் முன்வரவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் யூடிஸ் டன்பர் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரி மைக் எர்வின் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தனர். இவர்கள் யாழ். நகரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான தூதுக்குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போதே கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன், சூழலியலாளர் பொ. ஐங்கரநேசன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன், சூழலியலாளர் பொ. ஐங்கரநேசன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது வட பகுதியின் ஜனநாயக சூழல், வடக்கு தேர்தல் தொடர்பிலும் வடபகுதியின் விவசாயம், மீன்பிடித்துறை, கைத்தொழில் துறை குறித்தும் யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் பணிப்பாளர் கூட்டமைப்பு தூதுக்குழுவிடம் கேட்டறிந்துள்ளது. மாகாணசபைக்கு நிதி அதிகாரம் இருக்கின்றதா என்பது குறித்தும் அவர் கேட்டறிந்துள்ளார்.
சந்திப்பின்போது தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. வடக்கில் பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் படையினரால் அபகரிக்கப்பட்டு வருகின்றது. பெருமளவான காணிகள் இராணுவ வசமே உள்ளன. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்குக் கூட தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டோர், அநாதைகளாக்கப்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு உரிய அடிப்படை வசதிகளோ வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளோ இதுவரை வழங்கப்படவில்லை. யுத்தத்தில் அங்கவீனமானவர்களுக்கும் உதவிகள் வழங்கப்படவில்லை. வடமாகாண சபை ஏற்படுத்தப்பட்ட பின்னர் இந்த விடயம் குறித்தே முக்கிய கவனம் செலுத்தப்படும். எனவே யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவதற்கு வடமாகாண சபைக்கு யுஎஸ்.எயிட் நிறுவனம் நிதி உதவியினை வழங்க வேண்டும்.
ஆனாலும் வடமாகாண சபை உருவாக்கப்பட்டதும் வடபகுதி மக்கள் அதன் மீது பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருப்பார்கள். ஏனெனில் இதுவரை சிங்கள அரசாங்கத்திடம் கையேந்தியே அவர்கள் தமது தேவைகளை நிறைவுசெய்துள்ளனர். கூட்டமைப்பு வடமாகாண சபையை கைப்பற்றியதும் அவர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படும். ஆனால் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய சிங்கள இனவாத அரசாங்கம் இடமளிக்குமா என்பது சந்தேகமாகும். என வே இத்தகையதொரு நிலையில் வடமாகாண சபைக்கு யு.எஸ்.எயிட் நிறுவனம் நிதி உதவிகளை வழங்க வேண்டும்.
நீண்டகாலமாக வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது. விவசாயம், மீன்பிடித்துறை, கைத்தொழில் துறை என்பவற்றை அபிவிருத்தி செய்து வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments
Post a Comment