இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச நாடுகளின் செயற்பாடுகளை அமெரிக்கா விமர்சனம்
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற போது சர்வதேச நாடுகளின் செயற்பாடுகளை அமெரிக்கா விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் மெடலீன் அல்பிரிட் தலைமையிலான குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பதற்கான உரிமை என்ற முக்கிய பொறுப்பை சர்வதேச நாடுகள் உதாசீனம் செய்துள்ளதாகக் அல்பிரிட் குற்றம் சுமத்தியுள்ளார்.
இனச்சுத்திகரிப்பு, யுத்தக் குற்றச் செயல்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான வன்முறைகள் போன்ற விடயங்கள் குறித்து ஆர்2பீ எனப்படும் பாதுகாப்பதற்கான உரிமை அறிக்கை கவனம் செலுத்துவது வழமையானதாகும்.
ஐக்கிய நாடுகள் மற்றும் உலக நாடுகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதனால் ஆயிரக் கணக்கான தமிழர்கள் இறுதி கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ரீதியான யுத்தத்தின் மூலம் புலிகளை இல்லாதொழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தக் காலப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் உயர்வடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் பொதுமக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான இழப்புக்களுக்கு மத்தியில் சர்வதேச சமூகம் வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதனை தவிர்ந்த வேறு காத்திரமான முனைப்புக்களை மேற்கொள்ளத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்ட தருணத்தில் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கத் தவறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, மனித உரிமைப் பேரவை மற்றும் பாதுகாப்புச் சபை போன்ற இலங்கை விவகாரம் குறித்து உத்தியோகபூர்வமாக கூடி ஆராயத் தவறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தசாப்தங்களாக நீடித்து வந்த யுத்தம் நிறைவுக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அனைத்து இன சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சர்வதேச சமூகம் காத்திரமான ஒத்தழைப்பை வழங்க வேண்டுமென அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments
Post a Comment