Latest News

July 24, 2013

தேர்தல்கள் ஆணையாளர் ஜனாதிபதியின் கட்டளைகளையே நிறைவேற்றி வருகிறார் – சுமந்திரன்
by admin - 0

தேர்தல்கள் ஆணையாளர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவர் என்பதால் அவர் ஜனாதிபதியின் கட்டளைகளையே நிறைவேற்றி வருகின்றார் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான எம்.ஏ.சுமந்திரன் வடமாகாணத் தேர்தலுக்கு முகம் கொடுக்க அரசாங்கம் அச்சம் கொண்டிருப்பதாகவும் நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுமந்திரன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
கடந்தகால அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டது.
அவ்வாறு உருவாக்கப்பட்ட குழுவானது சில பரிந்துரைகளைச் செய்திருந்தது. ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட மேற்படி குழுவின் பரிந்துரைகளில் அதிகாரப்பகிர்வு தொடர்பிலும் நிரந்தர தீர்வு குறித்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எதுவும் உள்வாங்கப்பட்டதாய் இல்லை. தீர்க்க தரிசனமாய் கூறப்பட்டிருந்த மேற்படி பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாமும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளோம். ஆனால், அரசாங்கம் அதனை இன்றுவரை ஏற்றுக்கொண்டதாக இல்லை.
வடக்கில் தேர்தல் நடத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுவிடும் என்பது அரசாங்கத்தினால் பகிரங்கமாகக் கூறப்பட்டவிடயமாகும். இதன் காரணத்தினாலேயே வடமாகாண சபைக்கான தேர்தல் இத்தனைகாலமாக தாமதப்படுத்தப்பட்டுவந்தது. 2010இல் ஜனாதிபதி தேர்தலும் அதன் பின்னர் பொதுத் தேர்தலும் இடம்பெற்றும் கூட வடமாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றிருக்கவில்லை.
தற்போது வடமாகாணத்துக்கான தேர்தல்களை நடத்துவதற்கு அரசு விரும்பவில்லை. எனினும் சில அழுத்தங்கள் காரணமாக ேவ அதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரைகாலமும் மாகாண முறைமைகளில் இருந்த அதிகாரங்கள் அனுபவிக்கப்பட்டு வந்த நிலையில் தான் இன்று எதிர்ப்புகளும் இளம்பியுள்ளன. அதுமாத்திரமின்றி வடமாகாண சபைத் தேர்தலுக்கு எதிராக வழக்கு ஒன்றுகூட தொடரப்பட்டுள்ளது.
மாகாண முறைமையானது அதிகாரப்பகிர்வினை மையப்படுத்தியே வ ரையப்பட்டுள்ளது. இது பெரும்பான்மை தவிர்ந்தவர்களுக்கு சென்றடையக்கூடாது என்பது எந்தவகையில் நியாயமா கும்.
நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் மக்களை வெற்றிகொள்ள முடியாத நிலையொன்று அரசாங்கத்திடம் காணப்படுகின்றது. அதனால் வடக்கில் இராணுவத்தினர் தேர்தல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். வடக்கில் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு அரசு அச்சம் கொ ண்டுள்ளது. அதனால் கடந்த கால தேர்தல்களின் போது செயற்பட்டதைப் போன்று இம்முறையும் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதற்கு அரசு முயற்சிக்கின்றது.
இது இவ்வாறிருக்க இன்று நாட்டில் செயற்பட்டு வருகின்ற அனைத்து ஆணைக் குழுக்களும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களாகவே செயற்பட்டு வருகின்றன.
தேர்தல்கள் ஆணையாளர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவராவார். ஆகவே, அவர் ஜனாதிபதியின் கட்டளைகளையே நிறைவேற்றி வருகின்றார்.
அதேபோன்று தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை ஜனாதிபதி தெரிவுக்குழு எ ன அழைப்பதே பொருத்தமாகும்.
அதுமாத்திரமின்றி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவும் ஜனாதிபதி பயன்பாட்டு ஆணைக்குழுவாகவே ெசயற்பட்டு வருகின்றது என்றார்.
சுமந்திரன் எம்.பி. உரையாற்றிக் கொண்டிருந்த போது ஆளும் கட்சியின் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. இடையிடையே ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருந்தார்.
ஒரு சந்தர்ப்பத்தில் சுமந்திரன் எம்.பி. தனது உரையின் போது அஸ்வர் எம்.பி.யின் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் தினேஷ் குணவர்தனவைப் பார்த்து ஆளும் கட்சியின் பிரதம கொறடா தனது ஆசனத்தில் இருக்காது பின்வரிசையில் அமர்ந்து அஸ்வர் எம்.பி.யை தூண்டிவிடும் செயற்பாட்டினை மேற்கொண்டிருக்கின்றார் எனக் கூறினார்.
சுமந்திரன் எம்.பி. இப்படிக் கூறியதும் அமைச்சர் தினேஷ் குணவர்தன உடனடியாக எழுந்து முன்வரிசையிலுள்ள தனது ஆசனத்திற்கு வந்து அமர்ந்து கொண்டார்.
« PREV
NEXT »

No comments