Latest News

July 31, 2013

மீண்டும் தமிழர்களை அழிப்போம்- ஸ்ரீலங்கா அமைச்சர்
by admin - 0

இந்தியாவின் தமிழீழ கனவு இலங்கையில் ஒரு போதும் நிறைவேறாது. வட
மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிலவேளைகளில் வெற்றி பெற்று சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் தமிழ் மக்களுக்கு கண்ணீர், இரத்தம் மற்றும்
சுடுகாடு என்பவையே உறுதியாகும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க எச்சரித்தார். பிரபாகரனை நம்பி அழிவைத் தேடிக்கொண்டது போன்று மீண்டும் அதே அழிவை தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் இனவாத அரசியல் ஊடாக வடக்கு மக்கள் தேடிக் கொள்ளக்கூடாது. வடக்கில் தற்போாது முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து அபிவிருத்திப் பணிகளின் எதிர்காலமும் வடக்கு மக்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில், மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கும் கட்சியென்ற வகையில் ஜாதிக ஹெல உறுமய மேற்படி மாகாண சபை தேர்தல்களை புறக்கணிக்கின்றது. மறுபுறம் விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களை யாழ் குடா உட்பட வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் மீள்குடியமர்த்தாது தேர்தலை முன்னெடுப்பதையிட்டு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம்.
பிரிவினைவாத அதிகாரங்களை தேசிய அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு உரிய பதிலைத் தரவேண்டும். 13ஆவது திருத்தச் சட்டம் நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய
ஒருமைப்பாட்டிற்கே அச்சுறுத்தலாகும். இந்தியா கபட நோக்கத்துடன் இலங்கையில் தனி தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக 1987ஆம் ஆண்டு இந்து-லங்கா ஒப்பந்தத்தின் ஊடாக
மாகாணசபை முறைமையை அறிமுகம் செய்ததுடன் அதில் பிரிவினைவாத அதிகாரங்களையும்
உட்படுத்தியது. அன்று தொடக்கம் இன்று வரை நாடு பெரும் இனவாத
போராட்டத்தை சந்தித்து வருகின்றது.தற்போது வட மாகாண சபை தேர்தலின் ஊடாக தமிழீழக்
கனவை நிறைவேற்றிக்கொள்ள இந்தியா முற்படுகின்றது.இதற்கு ஒரு போதும் இடமளிக்க போவதில்லை.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சி.வி.விக்னேஸ்வரன் வெற்றி பெற்றால் வடக்கு மக்களுக்கு பழையபடி கண்ணீர், இரத்தம் மற்றும் சுடுகாடு என்பவையே உறுதிப்படும். ஆகவே,தெரிவு மக்கள் வசம். வீணாக பிரிவினைவாதிகளுக்கு துணைபோய் அழிவை தேடிக் கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
« PREV
NEXT »

No comments