Latest News

July 16, 2013

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக் கோரி டெசோ தீர்மானம்
by admin - 0

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும்
உச்சிமாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்
என்று டெசோ அமைப்பு கோரியுள்ளது. தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பான 'டெசோ'
இலங்கை தொடர்பில்
பல்வேறு தீர்மானங்களை இன்று நடைபெற்ற
தமது கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாக்கவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தமிழகத்தில் ஆரப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆர்பாட்டத்தில், இலங்கையில் தமிழர்
பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் தடுக்கப்பட வேண்டும் எனக் கோரியும்
வலியுறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13 ஆவது சட்டத்திருத்தம் ஒரு முழு அரசியல் தீர்வாக அமையாது எனவும், இன்று திமுக தலைவர்
கருணாநிதி தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
ஒரு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத்
தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தினைக்
கேட்டுத் தீர்வு காண்பதுதான், ஈழத் தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக
இருக்கும் என்பதே டெசோ அமைப்பின் நிலைப்பாடாகும் எனவும்
அக்கூட்டத்தின் தீர்மானம் கூறுகிறது இருப்பினும் தற்காலிகத் தீர்வாகவாவது, ராஜீவ் ஜெயவர்த்தன ஒப்பந்தம் பயன்பட
வேண்டும் என்றும் டெசோ கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது . இலங்கை அதிபர் மற்றும் அவருடைய அமைச்சரவையில் உள்ளவர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஊறுவிளைவிக்கும்
வகையில் அமைந்துள்ளது என்றும், எனவே இந்திய அரசு அந்த ஒப்பந்தத்தை,
எந்தவித திருத்தங்களும் இல்லாமல் நிறைவேற்றப்படுவதற்குப் பொறுப்பேற்க
வேண்டும் என்று டெசோ வலியுறுத்துவதாகவும், இந்நிலையிலேயே மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதெனவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால்
தாக்கப்படுகின்றனர், இலங்கையில் பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் சிங்களக்
குடியேற்றம் நடைபெறுகிறது எனக் குறை கூறும் தீர்மானங்களும் இலங்கைத்
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து விசாரணை எதுவும்
நடைபெறாத நிலையில் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவேண்டும் என வலியுறுத்தும் தீர்மானமும் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
« PREV
NEXT »

No comments