Latest News

July 15, 2013

கூட்டமைப்பு சம்பந்தன் அமைப்பை உடைக்க வழிவகுப்பாரா ?
by admin - 0

வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமித்தால், பதிலடியாக வடக்கு தமிழரசுக் கட்சியினர் தனி அணியாக தேர்தலில் குதிப்பார்கள். இவ்வாறு உதயனுக்கு நேற்று இரவு வடக்கு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து கூட்டமைப்பு தனது முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி நிலையைச் சந்தித்து வருகிறது. கூட்டமைப்பில் உள்ள பெரும்பான்மையானோரின் கருத்துக்களுக்கு மாறாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமிக்க முயன்று வருகிறார். ஆயினும் வடக்குப் பகுதியில் உள்ள வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கின் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் தமிழரசுக் கட்சியினர் சி.வி.விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராகக் களமிறக்குவதற்கு அறுதியாகவும் உறுதியாகவும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தலைமைக்கு கடிதம் மூலமும் தெரியப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் தமது விருப்பையும், கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளின் கருத்துகளையும் மீறி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தன்னிச்சையாக முடிவெடுத்து முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை நியமிப்பாரானால் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வடக்குப் பகுதி தமிழரசுக் கட்சியினர் மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். கடந்த இரு தினங்களாக ஆங்காங்கே நடைபெற்ற சிறுசிறு கூட்டங்களிலும் இது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழரசுக் கட்சி வடக்கில் தனித்துப் போட்டியிட்டால் கூட்டமைப்பின் கணிசமான வாக்குகள் பிரிக்கப்பட்டு அது பலவீனப்பட்டுவிடும்  என்று  அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, முதல்வர் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்டுள்ள இழுபறியைத் தீர்ப்பதற்காக சுழற்சி முறையில் சி.வி. விக்னேஸ்வரனுக்கும், மாவை. சேனாதிராசாவுக்கும் வழங்கும் முடிவை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து நாளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து  அவர் இந்தியா பயணமாக உள்ளார் என்றும் தெரியவருகிறது. எனினும் மாவை. சேனா திராசாவை முதல்வர் வேட்பாளராக களம் இறக்காவிட்டால் 20 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்ட வேண்டும் என்று யாழ்ப்பாணம், வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். எனவே மாவையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காததால் ஏற்படக் கூடிய இக்கட்டு நிலையில் இருந்து தப்பிப்பதற்காகவே கூட்டமைப்பின் தலைவர் அவசர அவசரமாக இந்தியாவுக்கு விரையவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 
« PREV
NEXT »

No comments