Latest News

July 23, 2013

13 ஆவது திருத்தச்சட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் பட்சத்தில் கிழக்கு மாகாண சபையில் விவாதிப்பதற்கு தீர்மானம்
by admin - 0

கிழக்கு மாகாண சபையில் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.துரைரட்ணம் மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோரால் கொண்டுவரப்படவிருந்த பிரேரணைகள் பாராளுமன்றத்தில் குறித்த திருத்தச்சட்ட விவகாரம் மீளவும் கொண்டுவரப்படும் பட்சத்தில் விவாதிப்பதற்கு கட்சித் தலைவர்கள் அனுமதியளித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வுக்கு முன்னர் இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த மாத அமர்வுகளில் ஆர்.துரைரெட்ணம் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவான பிரேரணைகளை முன்வைத்திருந்தபோதும் அவை சபை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

அதேநேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஜெமீல் இன்றைய தினம் மேலும் ஒரு தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

இவர்களுடைய பிரேரணைகளை சபை அமர்வு நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்வதா இல்லையா என்பது பற்றி இன்று செவ்வாய்க்கிழமை காலை கலந்துரையாடப்பட்ட போது பாராளுமன்றத்தில் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான விடயங்கள் தணிவு நிலையில் இருப்பதுடன் அது தொடர்பான வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

எனவே, தற்போது இந்த பிரேரணைகள் சபை அமர்வில் சேர்த்துக்கொள்ளப்படத் தேவையில்லை. அதேநேரம் பாராளுமன்றத்தில் மீளவும் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக எடுத்துக்கொள்ளப்படும் பட்சத்தில் விசேட அமர்வு ஒன்றை நடத்தி இந்தப் பிரேரணையை ஆராய்வதற்கு கிழக்கு மாகாண சபை தவிசாளர், முதலமைச்சர் உட்பட கட்சித் தலைவர்கள் அனுமதியளித்துள்ளனர்.

« PREV
NEXT »

No comments