Latest News

June 10, 2013

உகந்தை முருகன் ஆலயத்தில் கட்டப்படவுள்ள பௌத்த விகாரையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தல்
by admin - 0

அம்பாறை உகந்தை முருகன் ஆலயத்தில் கட்டப்படவுள்ள பௌத்த விகாரையை உடன் நிறுத்துமாறு கோரி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவசரமாக தொலைநகல் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுஇ

இலங்கை இந்துக்களின் புனித வழிபாட்டு தலமாக பல ஆயிரம் ஆண்டு காலமாக விளங்கும் அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் உள்ள உகந்தை முருகன் ஆலய சூழலில் சில பௌத்த துறவிகளினது ஆலோசனையில் திட்டமிட்ட வகையில் தாபிக்க திட்டமிட்டுள்ள பௌத்த விகாரை அமைக்கும் செயற்பாட்டையும், அரச மரம் நாட்டும் செயற்பாட்டையும் நிறுத்தி உதவ நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன்.

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னாடி தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்த அம்பாறை மாவட்டம் திட்டமிட்ட பெரும்பான்மை இன குடியேற்றம் காரணமாக இன்று தமிழ் மக்களை சிறுபான்மை நிலைக்கு தள்ளியதுடன்இ 3வது நிலை இனமாக மாற்றி அமைத்துள்ளது.

இந்நிலையில் இம்மக்களின் வழிபாட்டு தலங்களை உடைப்பதும், சிலைகளை பிடுங்குவதும், பௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகளை தாபிப்பதும் இந்த வகையில் இன மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதும் தற்போது இந்நாட்டில் ஒரு செயற்றிட்டமாக நடாத்தப்படுகின்றது.

இச்செயற்பாட்டை பௌத்த தர்ம போதனையை உண்மைக்கு உண்மையாக பின்பற்றும் பௌத்த சிங்கள மக்கள் எவரும்ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏனெனில் புத்த பகவானின் இலங்கை விஜய வரலாறுகளை எடுத்துக்கூறும் மகாவம்சம் என்னும் நூல் கௌதம புத்தர் சமாதான செயற்பாடுகளை மேற்கொண்டதை முக்கியமாக எடுத்துக் காட்டுகின்றது.

கடந்த கால அரசியலாளர்களும், பெரும்பாலும் இந்து பௌத்த மக்களின் ஒற்றுமையை பாதிக்கும் செயற்பாடுகளில் இறங்கியது மிகக்குறைவாகும். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்து பௌத்த மக்களின் ஒற்றுமையை சீர் குலைக்கும் வகையில் தங்களுடன் உள்ள பௌத்த அமைப்புக்கள் மற்றும் இராணுவத்தினர், இராணுவ புலனாய்வு பிரிவினர், ஏனைய படைப் பிரிவினரின் உதவியுடன் பௌத்த மக்கள் வாழாத இந்து மக்களின் வாழிடங்களில் பௌத்த விகாரைகளை தாபிப்பதும், இந்துக்களின் வழிபாட்டு தலங்களை இடிப்பதும், இந்து வழிபாட்டு விக்கிரங்களை பிடுங்குவதும், இந்து ஆலயங்களில் கொள்ளை செயற்பாடுகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அத்தோடு பல நூற்றாண்டுகளாக ஆடி, பௌணர்மியில் நடைபெற்ற வருடாந்த கதிர்காம உற்சவத்தை தற்போது இவ்வருடம் ஆவணி பூரணைக்கு மாற்றி அமைத்து ஆலய வழமையான உற்சவ செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்க முனைந்துள்ளனர்.

இவ்வேளை இவ்உகந்தை முருகன் ஆலயம் கதிர்காம ஆலய உற்சவத்தை ஒட்டிய வகையில் உற்சவம் நடைபெறும் வழமை கொண்டது. ஆனாலும் இதன் உற்சவத்தை ஆடி பௌர்ணமி தீர்த்தத்தை அடிப்படையாக கொண்டே நடாத்த வேண்டியுள்ளது.

இது இவ்வாறு இருக்க இவ் உகந்தை முருகன் ஆலயம் இந்துக்களின் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்கும். இவ்வேளை தற்போது திட்டமிட்ட வகையில் பௌத்த விகாரையை அமைப்பதும், அரச மரத்தை நடுவதுமான செயற்பாட்டுக்கு காணி வழங்குமாறு தங்களால் வலியுறுத்தப்படுவதாக எமக்கு செய்தி கிடைத்துள்ளது.

இச்செயற்பாடானது இந்து பௌத்த மக்களின் ஒற்றுமையை மேலும் மேலும் சீர்குலைப்பதற்கு வழிவகுப்பதற்கு உதவும் என்பது உண்மையாகும்.

எனவே இதனை அனுமதிக்க முடியாது. பௌத்த மக்கள் தங்கள் வாழிடங்களில் மிகப்பிரமாண்டமான பௌத்த விகாரைகளை கொண்டிருக்கும் இந்நிலையில் இந்து மக்களின் ஆலய சூழலில் திட்டமிட்ட பௌத்த விகாரைகளை ஏற்படுத்துவது பௌத்த மதத்தின் புனிதத்தை கெடுக்கும் ஒரு செயற்பாடாகும். புத்த பகவானை இன, மத, பிரச்சனையை தூண்டுவிக்கும் ஒரு பொருளாக பயன்படுத்துவதாகவே அமையும்.

எனவே இந்து பௌத்த மக்களின் இன ஒற்றுமையை விரும்பும் ஒரு அரச அதிகாரியாக தாங்கள் இருப்பீர்கள் என நான் கருதுகின்றேன். அவ்வாறாயின் உகந்தை முருகன் ஆலய சூழலில் பௌத்த விகாரை தாபிப்பதையும், அரச மரம் நடுவதையும் மேற்கொள்ளும் இன மத வாத பிக்குகளின் திட்டமிட்ட செயற்பாட்டுக்கு உறுதுணை புரியாது. இதை தடுத்து நிறுத்துமாறு அன்பாக வேண்டுகின்றேன். பதிலை அவசரமாக எதிர்பார்;க்கின்றேன் என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகளை மத விவகார அமைச்சர் மற்றும் இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments