Latest News

June 07, 2013

மதகுரு ரகுபதிக்கு நீதி கிடைக்குமா? - விடுதலைக்கு உதவுமாறு யாழ். குடாநாட்டு மக்கள் கோரிக்கை
by admin - 0

சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவைக் கொலை செய்வதற்காக அவர் மீது இடம்பெற்ற
தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட இந்து மதகுருவும்
அவரது மனைவியும் தொடர்ந்தும் சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து யாழ்.
குடாநாட்டு மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். பௌத்த மதம் மேலாதிக்கம் கொண்டுள்ள சிறிலங்காவில் இந்து மதம் இழிவுபடுத்தப்படுவதையே இந்த
மதகுருவினதும் அவரின் மனைவியினதும் தடுத்து வைப்பு வெளிக்காட்டுவதாகவும் குடாநாட்டு மக்கள் மேலும்
தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யாழ்.குடாநாட்டு மேலும் கருத்து வெளியிடுகையில், கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டம்
அதே மாதம் 18 ஆம் திகதி கொழும்பு மாநகர சபையின் அரங்கில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்ட
அப்போதைய சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத்
தாக்குதலில் அவரது வலது கண் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டிருந்தனர். முன்னாள்
சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா உட்பட 110 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை யார் செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்பதற்கு அப்பால், இந்தத் தாக்குதலில்
தொடர்பு கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதகுருவான ரகுபதி சர்மா, மற்றும்
அவரது மனைவியான சந்திரா ரகுபதி சர்மா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு கடந்த 14 வருடங்களாக
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கைதுக்கு உரிய காரணம் இல்லை. ஏனெனில், இந்த குண்டுத்தாக்குதல் நடைபெற்ற போது குறித்த
மதகுருவும் அவரது மனைவியும் கொழும்பிலுள்ள காளி கோயிலொன்றில் பூசை புரிந்துகொண்டிருந்தனர்.
இவர்களுக்கும் இந்தக் குண்டுத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பது நிரூபணமான பின்னரும்
இவர்கள் தடுத்து வைத்துள்ளமையானது சிறிலங்கா நீதி மன்றத்துக்கே அவமானமாகும். குறித்த மதகுரு கொழும்பிலுள்ள மகசின் சிறைச்சாலையிலும் அவரது மனைவி மட்டக்களப்பு சிறைச்சாலையிலும்
தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறைச்சாலைகளில் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
உணவு, உடைகள் உட்பட பல தேவைகளுக்கும் இவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இவர்கள்
சிறைகளில் வாடுவதால் இவர்களின் மூன்று பிள்ளைகளும் கடந்த 14 வருடங்களாக அநாதையாக்கப்பட்டு சிறுவர்
இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் கல்வி உட்பட எதிர்காலமே பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு ஆதரவாக மனித உரிமைகள் அமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட சட்டத்தரணிகள்
வாதாடி வருகின்ற போதிலும் இந்த சட்டத்தரணிகள் தமது வழக்கை தொடர்ந்தும் இழுத்தடித்து வருவதாக குறித்த
மதகுருவின் சில உறவினர்கள் தெரிவித்தனர். இந்த இழுத்தடிப்பு தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் எதுவித
நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இவர்கள் கவலையுடன் கூறுகின்றனர். செய்யாத குற்றத்துக்காக ஒரு குடும்பத்தையே சீரழிக்கின்ற கொடுமை உலகத்தில் சிறிலங்காவில்
மட்டுமே இடம்பெற்று வருகின்றது. அதுவும் மதகுருவாகிய ஒருவரை அவரது மனைவியுடன் சேர்த்து 14 வருடங்கள்
தடுத்து வைத்துள்ள காட்டாட்சி சிறிலங்காவிலேயே இடம்பெற்று வருகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழர்
விரோத போக்கும் தமிழர்களை எதிரிகளாக நோக்குகின்ற மனப்பான்மையும்
இன்று வரை தொடர்ந்து நடைபெறுவதையே இந்தத் தடுத்து வைப்புக்கள் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன. பௌத்தத்தின் பெயரால் ஆட்சி நடத்தப்படுகின்ற சிறிலங்காவில் பௌத்த மதத்திற்கும் புத்த பிக்குகளுக்கும்
மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களுக்கு எந்தவித முன்னுரிமையும்
கொடுக்கப்படவில்லை. ஜனநாயக நாடொன்றில் அனைத்து மதங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
ஆனால், சிறிலங்காவில் இந்த நிலை பின்பற்றப்படவில்லை. மாறாக பௌத்த மதமே முதன்மை மதமாகவும் பௌத்த
துறவிகளே முதன்மையான மதகுருக்களாக கணிக்கப்படுகின்றனர்.
இந்த நிலை ஏற்புடையதல்ல. குறித்த இந்து மதகுருவும் அவரது மனைவியும் தனது பெயரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது ஆட்சியிலிருந்து விலகியுள்ள முன்னாள்
சிறீலங்கா ஜனாதபதி சந்திரிகா கூட எந்தவித கருத்தும் தெரிவிக்காமலுள்ளமை அவரது இன
அடக்குமுறை மனப்பான்மையையே வெளிப்படுத்துகின்றது. எனவே, குறித்த மதகுருவின் விடுதலை தொடர்பாக நாங்கள் இனியும் சிறிலங்கா அரசாங்கத்தை நம்ப முடியாது.தமிழ் மக்கள் இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகள் என்பன இந்த மதகுரு குடும்பத்தின் விடுதலைக்காக குரல்கொக்க வேண்டும் என்றும் யாழ். குடாநாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments