Latest News

June 08, 2013

தமிழர்கள் ஆயுதம் தூக்கவா விரும்புகிறது அரசு? - மன்னார் ஆயர்
by admin - 0

தமிழர்களின் இருப்பை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசு கடந்த கால வரலாற்றுக்குள் மீண்டும் செல்ல எத்தனிக்கக் கூடாதென்று மன்னார் ஆயர் அதிவண. இராயப்பு ஜோசப் ஆண்டகை எச்சரித்துள்ளார்.

"மீண்டும் பழைய வரலாற்றுக்குச் செல்லவே ஒவ்வொரு முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. அதனைவிடுத்து பல்லின மக்கள் கொண்ட தேசத்தை பரந்த மனப்பாங்குடன் ஆட்சி புரிய அரசு முன்வர வேண்டும்'' என்று ஆயர் மேலும் குறிப்பிட்டார்.

மாகாணங்களுக்கு உள்ள குறைந்தபட்ச அதிகாரங்களையும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை மூலம் இல்லாதொழிக்கும் வகையிலான சட்டவரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழர்களை இங்கிருந்து விரட்டுகின்ற செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கடந்தகால வரலாறுகளுக்கு மீளச் செல்ல எத்தனிக்கின்றனர்.

இலங்கையில் பல மொழி பேசுவோர், பல மதங்களைப் பின்பற்றுவோர், பல கலாசாரங்களைப் பின்பற்றுவோர் வாழ்கின்றனர். இங்கு தமது கட்சி நலன்களுக்கு அப்பால் பல்வகைமை கொண்ட நாட்டை ஆளும் எண்ணத்துடன் ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும்.

குறுகிய மனோபாவங்களுக்கும், எண்ணங்களும் கொண்டவர்களால் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. மாறாகக் கடந்தகாலக் கசப்பான வரலாறுகளுக்குச் செல்ல முடியும்.

எனவே பல்வகைமை கொண்ட நாட்டை ஆட்சி செய்பவர் தேசத்தின் தந்தையைப் போன்று செயற்பட வேண்டும்என்றார்.
« PREV
NEXT »

No comments