2009ஆம் ஆண்டு மே மாத காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு நேரடியாக சென்று விளக்கேற்றி மலர் அஞ்சலியும் செலுத்தியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவரும் நகரசபை பதில் தலைவருமாகிய எம்.எம் ரதன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் பிள்ளையார் ஆலயத்திலும் ஜோர்தான் நாட்டு கப்பல் தரித்திருக்கும் கடற்கரையிலும் வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியிலும் கரையான் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் கற்பூரம் கொழுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி மலர் அஞ்சலி செலுத்தியும் உயிர் நீர்த்த மக்களுக்கு ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் ஈடுபட்டோம்.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல அதுதான் எமது போராட்டத்தின் மற்றுமோர் ஆரம்பம். இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நாம் பின்னிற்கப் போவதில்லை.
இதனது வெளிப்பாடே முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்று எமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளோம்.
வடக்கு கிழக்கு இணைந்த எமது தாயகத்தில் மற்றும் தமிழகத்திலும் புலம்பெயர்ந்த எமது உறவுகள் பல நாடுகளில் எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்த தயாராகி வரும் நிலையில் நேரடியாக அதே மண்ணில் அஞ்சலி செலுத்தப்பட்டது விசேட அம்சமே.
கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்ற நாம் முப்பது வருடம் அகிம்சை வழியிலும் அதன் பின்னர் முப்பது வருட காலமாக ஆயுத வழியிலும் போராடி எமது விடுதலையின் வீச்சுக்களை அதிகரித்தோம்.
ஆயினும் 2009 மே மாதம் 19ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் எமது ஆயுத வழியிலான போராட்டம் அடக்கப்பட்டது. அந்த இறுதிக்கட்டப் போரில் உயிர்நீத்த மக்களின் கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்தி வணங்குகின்றோம்.
எமது மக்களை இறுதிக்கட்டப் போரில் கொன்று குவித்த அரசாங்கம் அதன் மமதையில் போர் வெற்றி விழாவை தமிழர்களின் மனங்களை மேலும் துயரப்படுத்தி கொண்டாடுவது வேதனைக்குரியதே ஆயினும் நாம் அதனை கருத்திலே கொள்ளாது எமது விடுதலை நோக்கி மேலும் போராடுவோம். என முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்கள் மீது சத்தியம் செய்வோம்.
எமது போராட்ட வடிவங்கள் மாறின. ஆனால் இன்னும் இலட்சியங்கள் மாறவில்லை. இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை போரிலே காவு கொடுத்த நாம் தொடர்ந்தும் ஜனநாயக வழியில் இராஜதந்திர ரீதியில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்னும் நிலைப்பாட்டில் பயணிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு அந்த மண்ணிலேயே நினைவுத்தூபி அமைத்து அஞ்சலி செலுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் சூளுரைத்தார்.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே அஞ்சலி செலுத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
No comments
Post a Comment