வங்காள விரிகுடாவின் தென்கிழக்காகக் காணப்பட்ட சூறாவளிப்புயலானது தற்போது மட்டக்களப்பிலிருந்து கிழக்காக 900 கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் அதிகாரி க.சூரியகுமாரன் அவர்கள் அறிவித்துள்ளார். பொதுமக்களை குறிப்பாக மீனவர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அவர் வெளியிட்டுள்ள
செய்தி அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, மகாசென் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளிப்புயலானது வடமேற்குத்
திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் தாக்கத்தினால் கிழக்கு மற்றும் தென் கிழக்கின் 300 கிலோ மீற்றர் தூரத்திற்கப்பாலுள்ள ஆழ்கடல் பிரதேசங்கள் கடும் கொந்தளிப்பாகக் காணப்படும். அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட ஆழ்கடல் பிரதேசங்களில் கடும் காற்றுடன் மழையும்
காணப்படும். இதனால் மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் மேற்குறிப்பிடப்பட்ட ஆழ்கடல்
பிரதேசங்களில் தங்களது கடல் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த மகாசென் என பெயரிடப்பட்டுள்ள சூறாவளிப்புயலின் காரணமாக இலங்கையை அண்டிய
பிரதேசங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து காற்று வீசும். மட்டக்களப்பிலிருந்து காலிவரையான ஆழ்கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் பெய்யும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment