Latest News

May 12, 2013

வடக்கு வாக்காளர் பட்டியலை மாற்ற அவசர சட்டம் வருகிறது
by admin - 0

 இலங்கையின் வடக்கு பிரதேசங்களிலிருந்து 1983 முதல் 2009-ம் ஆண்டு மே மாதம் வரையான
காலப்பகுதியில் வெளியேறியவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கும் விதத்தில் வடக்கு மாகாண வாக்காளர் பெயர் பட்டியலில் மாற்றம் கொண்டுவருவதற்காக அரசாங்கம் அவசர சட்டமொன்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள
நிலையில், அடுத்த நாடாளுமன்றக்
கூட்டத்தொடரில் சட்டமூலம் நிறைவேற்றப்படும் என்று நாட்டின் நீதித்துறை அமைச்சரும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். யுத்தகாலத்தில் வடக்கிலிருந்து வெளியேறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாக்காளர் பெயர்
பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அதனை வடக்கு பட்டியலில் மாற்றிக்கொள்ள வசதியாக புதிய சட்டம்
கொண்டுவரப்படுவதாக ரவூப் ஹக்கீம் கூறினார். தேர்தல் ஆணையாளருடன் அண்மையில் நடத்தப்பட்ட
பேச்சுவார்த்தையின் பின்னரே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வட மாகாணத்திலிருந்து வெளியேறியுள்ள சகல
இனத்தவர்களும் தாம் ஏற்கனவே குறித்த
மாவட்டங்களில் வாழ்ந்தவர்கள் என்பதை நிரூபிப்பதன் மூலம் தம்மை வாக்காளர் பட்டியிலில் இணைத்துக்கொள்ள முடியும் என்றும் நீதியமைச்சர் தமிழோசையிடம் தெரிவித்தார். வடக்கு மாகாண வாக்காளர் பட்டியலில் புதிதாக எத்தனை பேர் இவ்வாறாக சேர்த்துக்கொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது என்று வினவியபோது, குறிப்பாக எண்ணிக்கையை மதிப்பிட
முடியாது என்ற போதிலும் முஸ்லிம்களின்
எண்ணிக்கை 15 ஆயிரம் பேர் வரை இருக்கலாம் என்றும் ரவூப் ஹக்கீம் கூறினார். வட மாகாணசபை தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்போவதாக ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ பல தடவைகள் கூறியிருந்தார். எனினும் அரசாங்கம் அதுதொடர்பில் இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. இதற்கிடையே, வடக்கில் யுத்த காலத்துக்குப்
பின்னர் குடிசன விகிதாசாரம் மாறிவிட்டதால் அங்கு இப்போது தேர்தல்
நடத்தக்கூடாது என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் கோரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments