Latest News

April 04, 2013

தாக்குதல் நடத்தியோர் புலனாய்வாளர்களே! சந்தேகம் வெளியிடுகிறார் சரவணபவன் எம்.பி.
by admin - 0

உதயன்' பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய காடையர்கள் அணிந்திருந்த ஆடைகள், தாக்குதல் நடத்திய விதம் என்பவற்றைப் பார்க்கும்போது அவர்கள் இராணுவப் புலனாய்வாளர்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். அரசுக்குத் தெரியாமல் அல்லது அரசின் அனுமதி இல்லாமல் இவ்வாறான அராஜகங்கள் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "உதயன்' பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீது 7 பேர் கொண்ட காடையர் கும்பலொன்று நேற்று அதிகாலை மிலேச்சத்தனமான முறையில் நடத்திய தாக்குதலில் அலுவலகம் முற்றாகச் சேதமடைந்துள்ளது. அத்துடன் கிளை முகாமையாளர் உட்பட பணியாளர்கள் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் "உதயன்' "சுடர் ஒளி' பத்திரிகைகளின் நிர்வாகப் பணிப்பாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தவை வருமாறு: உதயன் பத்திரிகைக் பிரதிகளை வன்னிக்கு எடுத்துச்செல்லும் வாகனம் வழமைபோன்று நேற்று அதிகாலை பத்திரிகைப் பிரதிகளை எடுத்துச் சென்றது. இவ்வாறு சென்ற வாகனம் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள்ள உதயன் அலுவலகத்தில் பத்திரிகைகளை இறக்குவதற்கு ஆயத்தமானபோது அங்கு முகமூடி அணிந்து வந்த காடையர்கள் உதயன் பணியாளர்களைக் விக்கெட் கொட்டன்களினால் கடுமையாகத் தாக்கினர். அத்துடன் அலுவலகத்தினுள்ளே புகுந்து கணினிகள், தளபாடங்களை அடித்து நொறுக்கினர். பத்திரிகைகளை எடுத்து வெளியே வீசியுள்ளனர். அங்கு தரித்து நின்ற வாகனங்களும் காடையர்களின் காட்டுமிராண்டித்தனத் தாக்குதலுக்கு இலக்காகின. மொத்தத்தில் கிளிநொச்சி அலுவலகம் முற்றாக சேதமடைந்துள்ளது. காடையர்களின் இந்த வெறிபிடித்த தாக்குதலில் கிளை முகாமையாளர் உட்பட மூன்று பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து குறித்த இடத்துக்கு உடனே விரைந்த நான் நிலைமைகளை அவதானித்தேன். கிளிநொச்சி பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்தோம். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கிளிநொச்சி பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் துணிவுடன் செய்திகளாக வெளியிடும் உதயன் பத்திரிகையை முடக்கும் நோக்குடன் காடையர்கள் கடந்த காலங்களில் இருந்து பல்வேறு வடிவங்களில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எமது ஊடகவியாளர்கள், பணியாளர்கள் பலர் பலியாகினர் பலர் காயமடைந்தனர். எனினும், உதயன் எதற்கும் அடிபணியவில்லை. இந்நிலையில் உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியை முடக்கும் நோக்குடன் அண்மைக் காலமாக காடையர்களினால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விநியோகப் பணியாளர்கள் நடுவீதியில் வைத்து கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்தனர். பத்திரிகைகள் நடுவீதியில் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் நேற்று அதிகாலை உதயனின் கிளிநொச்சி அலுவலகம் மீது காடையர்கள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. எமது விநியோகப் பணியாளர்களைக் காயப்படுத்தியுள்ளது. கறுப்புத் துணியினால் தமது முகத்தை மறைத்துக்கொண்டு தாக்குதல் நடத்திய காடையர்கள் அணிந்திருந்த அரைக்காற்சட்டைகள், தாக்குதல் நடத்திய விதம் என்பவற்றைப் பார்க்கும்போது அவர்கள் இராணுவப் புலனாய்வாளர்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கில் 24 மணிநேரமும் இராணுவத்தின் ஆட்சி இடம்பெறுகின்றது. இந்நிலையில், இராணுவத்தின் துணை இல்லாமல் அல்லது அரசுக்குத் தெரியாமல் அல்லது அரசின் அனுமதி இல்லாமல் இவ்வாறான அராஜகங்கள் இடம்பெற வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் பத்திரிகை அலுவலகங்களை தாக்கியோ அல்லது விநியோகப் பணியாளர்களை அடிபணிய வைத்தோ உதயன் பத்திரிகையை முடக்கலாம் என்று தப்புக்கணக்குப் போடுபவர்களிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். அதாவது தடைகள், அராஜகங்களைத் தகர்ந்தெறிந்து உதயன் வீறு நடைபோடுவான். அவனின் பணி தொடரும்.
கடந்த சில நாள்களாக சில இடங்களில் "உதயன்' பத்திரிகையை வாங்காதிருக்குமாறு எச்சரித்து வன்னியின் பல இடங்களில் அதாவது; தமிழ் மக்களின் உரிமைக் குரலாக அச்சமின்றி உண்மைகளை வெளியிட்டு வரும் உதயன் பத்திரிகை மக்கள் கரங்களுக்குச் சென்றுவிடாமல் தடுப்பதற்கு வகுக்கப்பட்ட ஒரு பெரும் வஞ்சக நிகழ்ச்சித் திட்டமே இது. எத்தனையோ விதமான நெருக்கடிகளை உதயன் சந்தித்தபோதும் உதயன் எவ்விதத் தளர்வுமின்றி, தமிழ் மக்களுக்காகவும், தமிழ்த் தேசியத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறான். இவ்வாறு வன் முறைகள் மூலமும், நரித் தந்திர வேலைகள் மூலமும் உதயனின் அர்ப்பணிப்புடன் கூடிய பயணத்தை நிறுத்த முடியாத நிலையில் உதயன் மக்கள் கைக்குச் சென்றடைவதைத் தடுக்கும் வகை யிலான கீழ்த்தர நடவடிக் கைகளும், வன்முறைகளும் திட்டமிட்ட வகையில் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளன. என்றார் சரவணபவன்.

« PREV
NEXT »

No comments