
என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும் அதற்கு என் சித்தியும் அவருக்கு நெருக்கமாக உள்ள டைரக்டர் களஞ்சியமும்தான் பொறுப்பு என்று நடிகை அஞ்சலி தெரிவித்தார். நடிகை அஞ்சலிக்கும், இத்தனை நாளாய் அவரது அம்மா என்று திரையுலகம் நினைத்துக் கொண்டிருந்த பாரதி என்ற பெண்மணிக்கும் கடும் சண்டை மூண்டுள்ளது. பாரதி உண்மையில் தனது தாய் இல்லை என்றும், சித்தி முறை உறவினர் என்றும் அஞ்சலி கூறியுள்ளார். மேலும் தான் சம்பாதித்த பணம் முழுவதையும் சித்தி பாரதியும் அவருக்கு நெருக்கமாக உள்ள இயக்குநர் களஞ்சியமும் அபகரித்துக் கொண்டதாகவும், தன் உயிருக்கு அவர்களால் ஆபத்து நேரக் கூடும் என்றும் அஞ்சலி அச்சம் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரின் அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்கவே ஹைதராபாதில் குடியேறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "என் குடும்பத்தினருக்கு செய்யாத பல விஷயங்களை என் சித்தி குடும்பத்தினருக்கு செய்தேன். என் உடன்பிறந்தவர்களைக் கூட நான் பார்ப்பதில்லை. எல்லாமே சித்திக்குத்தான் கொடுத்தேன். ஆனால் அவர் நன்றியில்லாமல் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். நான் இத்தனை காலமும் நடித்து சம்பாதித்த பணம் முழுவதையும் அவர் சுருட்டிக் கொண்டார். இதற்கு இயக்குநர் களஞ்சியமும் உடந்தை. இனி என் மீது அபாண்டமாக எப்படி வேண்டுமானாலும் பழி போடுவார்கள். என் உயிருக்கே கூட ஆபத்து வரும் வாய்ப்புள்ளது. எனவேதான் சென்னையிலிருந்து ஹைதராபாத் வந்து விட்டேன். என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும் கூட அதற்கு முழு பொறுப்பு என் சித்தியும் இயக்குநர் மு களஞ்சியமும்தான். இன்னும் சில தினங்களில் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து முழு உண்மைகளையும் சொல்லப் போகிறேன்," என்றார்.
No comments
Post a Comment