Latest News

April 15, 2013

இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே!
by admin - 0

இலங்கை தமிழர்களுக்கு, அதிபர் ராஜபக்ஷே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர்,” என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் கூறினார்

இந்திய எம்.பி.,க்கள் குழு, சமீபத்தில் இலங்கை சென்றிருந்தது. இந்தக் குழுவில், சந்தீப் தீட்சித் (காங்.,), பிரகாஷ் ஜாவடேகர், அனுராக் சிங் தாக்கூர் (பா.ஜ.,), தனஞ்ஜெய் சிங் (பகுஜன் சமாஜ்) மற்றும் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்., – எம்.பி., சவுகதா ராய் ஆகிய, ஐந்து பேர் இடம் பெற்றிருந்தனர்.

இலங்கை பயணம் முடித்து, நாடு திரும்பியுள்ள இவர்களில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய், நேற்று முன்தினம் கூறியதாவது:

இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில், கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொருளாதார நடவடிக்கைகளில், சற்று சுறுசுறுப்பு காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து, சாவகச்சேரி வரை சென்றோம். மார்க்கெட் பகுதிகளில், மக்கள் கூட்டம் இருந்தது. இருப்பினும், அவர்கள் மத்தியில், ஒரு சகஜமான வாழ்க்கை சூழல் இல்லை என்பதை காண முடிந்தது. இன்னமும், ஒருவித அச்ச உணர்வு, அவர்களிடம் உள்ளது.

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், முன்பிருந்த நிலை தற்போது இல்லை மாறிக் கொண்டே வருகிறது. தமிழர் பகுதிகளில், சிங்களவர்கள் குடியேற்றமும் அதிகமாக உள்ளது. தங்களின் விளை நிலங்களை எல்லாம், சிங்களவர்கள் கைப்பற்றுவதாக, தமிழர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்படும் வீடுகளை பார்த்தோம். ஓரளவு கட்டிக் கொடுத்துள்ளனர். மற்றபடி, சொல்லக் கூடிய அளவுக்கு, சிறப்பாக பணிகள் எதுவும் நடைபெறுவதாக தெரியவில்லை.

இலங்கையில், போர் முடிந்து நான்காண்டுகள் ஆனாலும், தமிழர்கள் பிரச்சினை அப்படியே உள்ளது.

அங்குள்ள நிலைமைகளை பார்க்கும் போது, தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது, முற்றிலும் சந்தேகமே. அதிகாரங்களை அளிக்க, இலங்கை அரசாங்கம் மிகுந்த தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்த மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. செப்டம்பர் வரை, அந்தத் தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளன.

போலீஸ் அதிகாரம், நில உரிமை அதிகாரம் போன்றவை, தமிழர்களின் பிரச்சினைகளை ஓரளவு தீர்க்க உதவும். ஆனால், இந்த இரண்டையும், இலங்கை அரசு தரவே தராது என்பது, நிதர்சனமாக தெரிகிறது.

தமிழர் பகுதிகளுக்கு, மாகாண அரசியல் அதிகாரம் வழங்குவது குறித்து, பேச்சுவார்த்தை நடத்துவதாக, இலங்கை அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில், தமிழ் தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க மறுக்கின்றனர். இலங்கை அரசு காலம் கடத்தும் வேலையை செய்வதாகவும் குறை சொல்கின்றனர்.

அங்கு நடந்த போரின்போது நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, இலங்கை அரசே குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளைக் கூட, நிறைவேற்ற இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை.

இலங்கையில், தமிழர் தலைவர்கள் சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் இந்திய தூதரக அதிகாரி மகாலிங்கம் ஆகியோரை சந்தித்தோம்.

நேரமின்மை காரணமாக, கிழக்குப் பகுதிக்கு செல்ல முடியவில்லை. பசில் ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் பீரிஸ் ஆகியோரையும் சந்தித்தோம்.

இவ்வாறு சவுகதா ராய் கூறினார்.
« PREV
NEXT »

No comments