Latest News

April 07, 2013

சேட்டை - விமர்சனம்!
by admin - 0


யூடிவி ’மோஷன்’ பிக்சர்ஸ் வழங்கும் சேட்டை. ரொம்ப அபத்தமான வார்த்தைகள் நிறைந்த டெல்லி பெல்லியை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.அந்த அளவுக்கு ஆபாசம் இல்லாமல், கொஞ்சம் ஜாக்கிரதையாகவே கதையை கையாண்டிருக்கார்கள். ஆனால் இதிலும் ஆபாசமான வசனங்கள் இருக்கிறது. 

ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி ஒரே பத்திரிக்கையில் வேலை செய்ய, அஞ்சலி ஒரு பிரபல ஆங்கில பத்திரிக்கையில் வேலை செய்கிறார். அதற பழைசான கதையாக இருந்தாலும், சந்தானத்தோட டைமிங் காமெடி தான் படத்தோட பலமே. வைரத்தை கடத்துவதும், அதை கடத்துபவர்களை கண்டுபிடிப்பதும் ஐதர் காலத்து கதையாக இருந்தாலும், இன்றைய டிரெண்டுக்கு ஏற்றாற்போல் காமெடி கலந்து கொடுத்திருக்கிறார்கள்.கடத்தல் கும்பல் வைரங்களை டப்பாவில் போட்டு ஒரு பெண்ணின் உதவியுடன் கடத்துகிறது. ஹன்ஸிகாவின் தோழியான அந்த பெண்  டப்பாவை விமான பணிப்பெண்ணான ஹன்ஸிகாவிடம் கொடுத்து குறிப்பிட்ட விலாசத்தில் சேர்த்துவிட சொல்கிறார். நட்புக்கு செய்யும் உதவியாக எண்ணி ஹன்ஸிகா அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அவரது பாய் ஃபிரண்டான ஆர்யாவிடம் வைர டப்பாவை கொடுத்து சேர்த்துவிட சொல்லுகிறார். 

’இலியானா சிக்கன்’ சாப்பிட்டுவிட்டு ’டர்ர்ர்ர் டர்ர்ர்ர்’ என புதுப்புது ரிங்டோன்களை ரிலீஸ் செய்துகொண்டிருக்கும் சந்தானம், வைர டப்பாவையும், லேப் டெஸ்டுக்கு கொடுக்க வேண்டிய ‘கக்கா’ டப்பாவையும் பிரேம்ஜியிடம் கொடுத்து உரிய இடத்தில் சேர்க்கச் சொல்கிறார். பிரேம்ஜி டப்பாக்களை மாற்றி கொடுத்துவிட, கடத்தல் கும்பல் தலைவனான நாசரிடம் கக்கா டப்பா செல்கிறது. 

டப்பாவை பிரித்து பார்த்து ’நான் சாம்பார் வடைனு நினைச்சனே’ என்று சொல்லும் போதும், கக்காவை திரையில் காட்டும்போதும் பலபேரின் ‘உவே’ என்ற சத்தம் காதில் கேட்கிறது. அவங்களுக்கெல்லாம் கக்காவுக்கு பதில் தங்கக் காசு கொட்டுகிறதா எனத் தெரியவில்லை. (திரையில்பாத்ததிற்கே முகத்தை சுளிக்கும் அவர்களுக்கு அதை சுத்தம் செய்பவர்களின் மனநிலையைப் பற்றி என்னத் தெரியப் போகிறது. )
கதைக்கு வருவோம். லேபில் இருந்து சந்தானம் கைக்கே வரும் வைர டப்பாவைத் தேடி, கக்காவால் பாதிக்கப்பட்ட நாசர் கும்பல் வருகிறது. வைரம் சிக்கியது பத்திரிக்கையாளர்களிடம் என்று தெரிந்ததால், விஷயம் வெளிவராமல் இருக்க அவர்களை கொலை செய்யும் முடிவுக்கு வருகிறார் நாசர். அங்கு நடக்கும் சண்டையில் வைர டப்பாவுடன் தப்பிக்கும் பத்திரிக்கையாளர் டீம், மாவு பூசிய முகத்துடன் நேராக அஞ்சலி வீட்டிற்கு செல்கின்றனர்.

’ஐயோ இவர் என்ன இவ்ளோ பயங்கரமா இருக்காரு’ என பிரேம்ஜியைப் பார்த்து அஞ்சலி அதிர்ச்சியடைய “முகம் கழுவுனதுக்கு அப்பறம் பாரு இன்னும் பயங்கரமா இருப்பான்’ என சந்தானம் சொல்ல டிடிஎஸ் எஃபெக்டை மிஞ்சுகிறது தியேட்டரில் எழும் சிரிப்பலை. ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி ஒரு சேட்டிடம் ஏமாந்து வைரங்களை குறைந்த விலைக்கு விற்றுவிட, நாசர் ஹன்ஸிகாவை கடத்தி வைத்துக்கொண்டு வைரத்தை திரும்பக் கேட்கிறார். 

ஏமாந்துபோன சேட்டுவிடமிருந்து வைரங்களை எப்படி திரும்ப பெறுகிறார்கள்? நாசரிடமிருந்து பளிச்சென்ற ஹன்ஸிகாவையும், வைரங்களையும் எப்படி மீட்கிறார்கள்? என்பதே காமெடியான கிளைமேக்ஸ்.முதல் பாதியில் இருந்த சிரிப்பு சத்தம், இரண்டாவதுபாதியில் குறைவாகவே இருக்கிறது. இளைஞர்கள் தம் அடிக்க எழுந்து செல்வதற்கு வசதியாக அவ்வப்போது பாடல்கள் உதவுகின்றன. ’போயும் போயும் இந்த காதலுக்குள்ளே’ என்ற மெலொடி பாடல் தியேட்டரிலிருந்து வெளியேறும் போது முனுமுனுக்கக்கூடிய பாடல். ’என்ன தான் பபுள்காம் டேஸ்டா இருந்தாலும் அத கீழ துப்பி தான் ஆகனும்’என பிரேம்ஜியின் காதலி கழட்டிவிட்டு போக, பிரேம்ஜியின் கனவில் உதயமாகிறது கானா பாலாவின் கலாய்ப்பான பாடல்.

நான் கடவுள், மதராசபாட்டினத்திற்கு பிறகு நீண்ட காலம் கழித்து இந்த படத்தில் ஆர்யா சில காட்சிகளில் சீரியசாக நடிப்பது அவரா இவர்? என்பது போல் ஒத்துப் போகாததாக இருக்கிறது. படத்தின் ’யு’ சர்டிஃபிகேட்டுக்காக ஆர்யா அஞ்சலியின் லிப்லாக் காட்சியை முழுதாக காட்டாமல் கத்தரித்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம்.ஹன்ஸிகாவுக்கும் அஞ்சலிக்கும் இரண்டு டூயட் பாடல், ரொமான்ஸ் என பொதுவான காட்சிகளே இருந்தாலும், லிப்லாக் கிஸ் அடித்த அஞ்சலியின் நடிப்பு தான் ‘நச்ச்ச்ச்ச்’சென இருக்கிறது.சந்தானத்தின் வயிறு கலக்குவது,  ’குசு’ விடுவது போன்ற காட்சிகளின் போதெல்லாம் ‘ஓ இதுதான் ‘மோஷன்’ பிக்சர்ஸா?’  என்ற கேள்வி மேலோங்குகிறது. நாசர் இந்த படத்திற்காக பெருமுயற்சி எடுத்திருப்பதாக சொன்னது உண்மை தான். காமெடியான வில்லன் கேரக்டரில் திறம்பட ’நச்’சென நடித்திருக்கிறார் நாசர்.

ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி தங்கும் வீட்டின் உரிமையாளராக வரும் தெலுங்கு நடிகர் ஆலி சந்தானத்தின் காமெடிக்கு ரசிக்கும் வகையில் கவுண்டர் கொடுப்பது, ஆலி வேறு பெண்ணுடன் இருப்பது போன்ற ஃபோட்டோக்களை வைத்து சந்தானம் வீட்டு வாடகை கொடுக்காமல் அவரிடம் பத்தாயிரம் வாங்குவது ஆகியவை ரசிக்கக் கூடிய காமெடிகள்.ஆங்கில பத்திரிக்கையில் வேலை செய்யும் அஞ்சலியை சந்தானம் ’இங்கிலீஷ் பேப்பர்’ என்று கூப்பிடுவது, ’உலகத்தில் எதுவுமே நடக்காத மாதிரி சிட்டில நடக்குற பார்டிய மட்டும் போடுவீங்களே அந்த பத்திரிக்கை தான’என்று கேட்பதும், ’இங்கிலீஷ் பேப்பர் எடைக்கு போட்டா நிறைய காசு கிடைக்குங்குற திமிருல பேசாதீங்க’ என்பன சந்தானம்-அஞ்சலியின் பெஸ்ட் காமெடி. 

ஹன்சிகாவும், ஆர்யாவும் சந்தானம் கண்முன்னே ரொமான்ஸ் செய்யும் போது ‘கிசுகிசு எழுதுற எனக்கே கூச்சமா இருக்குடா, ஆட்கள் வேலை செய்கிறார்கள்னு எழுதி போர்ட் மாட்டுடா’ என்பன கிளாஸான காமெடிகள். கொழுக் மொழுக் ஹன்ஸிகா ஏர்ஹோஸ்டர்ஸ் கேரக்டருக்கு கச்சிதம்.இதில் ஆபாசம் இருப்பதாக சொல்லும் பெருசுகளுக்கு வேண்டுமானால் படம் பிடிக்காமல் போகலாம். சாதாரணமா பேச்சுலர் பசங்க தங்கியிருக்கும் அறையில் நடப்பதை கொஞ்சம் டீசண்டாகவே சொல்லி இருக்கிறார்கள்.

சேட்டை - சந்தானத்தின் சிரிப்பு வேட்டை!nakkeran

« PREV
NEXT »

No comments