முடிவடைந்து நான்கு வருடங்களின் பின்னரும்கூட,
அங்கு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
தமிழ் அரசியல் கைதிகள் மீதான சித்திரவதைகளும்,
வன்முறைகளும் பாரியளவில் அதிகரித்துச்
செல்வதாகவும், இவர்களில் சிலர் தடுப்புக்காவலர்களின் பிடியில்
இருக்கும்போதே இறந்து விடுவதாகவும் சர்வதேச
கண்காணிப்பு அமைப்பு ஒன்று எச்சரித்திருக்கிறது. இலங்கைத்தீவின் வட பகுதியான யாழ் குடாநாட்டைத்
தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகத் தசாப்த
காலமாக இடம்பெற்றுவந்த யுத்தத்தில், தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்பினரை இறுதியாக 2009
இல் இலங்கை இராணுவம் நிர்மூலம் செய்ததன் பின்னர்
சுமார் பத்தாயிரக்கணக்கில் தமிழர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாமலேயே சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். லண்டனைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் “இலங்கையில் சமாதானத்திற்கும் நீதிக்குமான
பிரச்சாரம்” என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி,
அன்றிலிருந்து இலங்கை அரசு கிரமமாகவே நாட்டின் சட்டங்களை மீறிவருவதோடு,
திட்டமிட்டமுறையில் இந்தக்கைதிகளை வன்முறைக்குட்படுத்தி வருதனூடாக யுத்தத்திற்குப்
பின்னரான நல்லிணக்கம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளையும் மீறிவருகிறது. இந்தத்
தமிழ்க் கைதிகளில் பெருமளவானோருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. சுமார் 26 வருடகாலமாக சிறுபான்மைத் தமிழர்களுக்கும் சிங்களப் பெரும்பான்மையின அரசின்
இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்றுவரும் இந்த யுத்தத்தின்போது இரண்டு தரப்பிலும்
சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். போராளிகள், அரச
படைகள் என்ற இரண்டு தரப்புமே இந்த யுத்தத்தின்போது பாரிய மனித உரிமை மீறல்களில்
ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால், பிரசித்தமான உல்லாசப் பயணிகளுக்கான நாடு என்று தன்னை மீள்நிர்மாணம்
செய்துகொண்டிருப்பதனூடாகவும், இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ள பொதுநலவாய
நாடுகளின் உச்சிமாநாட்டினை நடாத்தவுள்ள அடுத்த நாடு என்ற ரீதியிலும்
இலங்கை சர்வதேசத்தில் முன்னரைப்போன்ற நம்பிக்கைத்தன்மையினை மீண்டும்
பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையின்
ஆட்சித்தலைமை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படாவிட்டால், அங்கு நிலையான சமாதானத்தை அடைவதற்குரிய ஒரு அரிய வாய்ப்பு பாழடிக்கப்பட்டுவிடும்
என்று “இலங்கையில் சமாதானத்திற்கும் நீதிக்குமான பிரச்சாரம்” என்கின்ற அந்த
அமைப்பு எச்சரிக்கிறது. இந்த வருடம் நவம்பரில் கொழும்பில் நடாத்தப்பட ஏற்பாடாகியிருக்கும் பொதுநலவாய
நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பங்கு கொள்வதனை மகாராணியாரும், பிரதமர் டேவிட்
கமரனும் தவிர்க்கவேண்டும் எனக்கோரும் அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. இலங்கையின் மனித உரிமைத் தரவுகள் தொடர்பில் அதிகரித்துவரும்
அழுத்தங்களுக்கு மத்தியிலும், கொழும்பில் இடம்பெறவுள்ள மாநாட்டில்
பங்கேற்பது இல்லை என்ற முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கும்
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சக வட்டாரம், “இந்த மாநாட்டில்
பிரித்தானியா கலந்துகொள்ளுமா என்பது குறித்துக் கலந்துரையாடுவதற்குக் காலம் நிறைய
இருக்கிறது” என்று விளக்கமளித்தது. இது தொடர்பில் கருத்துவெளியிட்ட பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சிற்கான
பேச்சாளர் ஒருவர்: “வெளிப்படையாகவும் சரி, பிரத்தியேகமாகவும் சரி, இலங்கையில்
போருக்குப் பின்னரான நல்லிணக்கம் தொடர்பாகவும், பொறுப்புக்கூறும் விடயம்
தொடர்பாகவும், மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாகவும் பிரித்தானிய அரசின்
நிலைப்பாடு என்பது மிகவும் தெளிவானது” என்று கூறினார். கடந்த வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமை கவுன்சில் இலங்கையின் தரவுகள்
குறித்து மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளதோடு,
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பிக்கைத் தன்மைவாய்ந்த சுயாதீன
விசாரணையொன்று மேற்கொள்ளவேண்டுமென்று இலங்கையை ஊக்குவித்திருக்கிறது.
யுத்தத்தின் கடைசி ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 40,000 ற்கும் அதிகமான மக்கள்
கொல்லப்பட்டதாக முன்னர் ஐ.நா விசாரணை மூலம் தெரியவந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான இந்தக் கோர்வை,
இலங்கையிலும், பிரித்தானியாவிலும் இருக்கும் தமிழ் மற்றும் சிங்கள ஆய்வாளர்களினால்
உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, வவுனியா தடுப்பு முகாமில் கடந்த வருடம் ஜூன்
மாதத்தில் இடம்பெற்ற கலவரத்தின்போது பொலிசார் மேற்கொண்ட மிகக்கொடுமையான
பதில்நடவடிக்கைகளைத் தொடர்ந்து கைதிகள் எவ்வாறு தடுப்பு முகாம்களில்
நடாத்தப்படுகிறார்கள் என்பது குறித்து இந்த அறிக்கையில் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது. “சிறைக்கைதிகள் மிகவும் பயங்கரமான
சூழ்நிலைகளுக்கு மத்தியிலேயே தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன்,
அவர்களிற்கு அடிப்படை மனித உரிமைகளும் மறுக்கப்பட்டிருக்கிறது,” என்று அந்த
அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆய்வறிக்கையில் உதாரணமாகத் தெரிந்தெடுக்கப்பட்டவர்களில் கணேஷன் நிமலரூபன்
என்ற தமிழ்க் கைதியும் அடங்குவார். அஞ்சல் அலுவலக அதிகாரியாக
வரவேண்டுமென்று விரும்பிய இவர் 2009 இல் கைதுசெய்யப்பட்டு சுமார் மூன்று தினங்கள்
தொடர்ச்சியாகச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக மூச்செடுக்க
முடியாது, இருதய நோய்க்கு உட்பட்ட இவர், பின்னர் தடுப்புக்காவலில்
இருக்கும்போதே இறந்துள்ளார். 28 வயதுடைய நிமலரூபனின் குடும்பத்தாரின் தகவல்களின்படி, இவர் சிறைச்சாலையில்
கிரமமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இதனால் அடிக்கடி சிகிச்சைக்காக
வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்லப்படும் இவர், தரையோடு சங்கிலியால்
பிணைக்கப்பட்டிருந்ததாகவும், குடிநீர் மற்றும்
உணவு போன்றவை இவருக்கு மறுக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு சமயத்தில் இவர் டெங்குக்
காய்ச்சலுக்கும் உள்ளாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிமலரூபன் சிறையில் ஏற்பட்ட கலகம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அதிகாரிகள்
தெரிவிக்கிறார்கள். அவருடைய தாயாரான, ராஜேஸ்வரியோ, தனது மகன் பொலீசாரின்
காட்டுமிராண்டித் தாக்குதலிலேயே கொல்லப்பட்டதாகவும், இதனை அவர்கள் மறைக்க
முயல்வதாகவும் தெரிவிக்கிறார். நிமலரூபனுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்ற
போராட்டத்தினால் வறுமையாகிவிட்ட தனது குடும்பம், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளானதாக
அந்தத் தாயார் தெரிவித்தார். “எனது பிள்ளை ஏதாவது தவறு செய்திருந்தால், அவன் நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்பட்டு அங்கு தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்,” என்று அவனது தாயார்
தெரிவித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. “எனது பிள்ளையைச்
சித்திரவதை செய்து கொலை செய்யும்படி எந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?. இதேபோன்றே உதாரணமாகக் கொள்ளப்பட்ட பிறிதொரு வழக்கில், 2007ம் ஆண்டில்
கைது செய்யப்பட்ட எம்.எம் என்றழைக்கப்படும் ஒரு ஓவியர் தனக்கு நிகழ்ந்த
கொடுமைகளை விளக்குகிறார். சிறுவயதிலேயே போலியோ நோய்க்குள்ளாகியிருக்கும்
28 வயதுடைய இவர், கைதுசெய்யப்பட்டு பலநாட்கள் சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்த
பின்னர் போலியான குற்றச்சாட்டுக்களடங்கிய பத்திரமொன்றில் தான் விடுதலைப்
புலிகளுக்கு உதவிபுரிந்துள்ளேன் என்று ஒப்புதல் கையெழுத்திடப் பலவந்தப் படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறார். தனது கைவிரல் நகங்கள் பிடுங்கப்பட்டதாகவும், உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதால்
மூன்றுதினங்கள் சுயநினைவிழந்திருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தற்போது குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் இவர், தனது சொந்த இடமான
வடக்கில் இருந்து பலமைல்கள் தொலைவிலிருக்கும் மத்திய மாகாணம் கண்டியிலுள்ள
சிறைச்சாலையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார். இவர்
கைதுசெய்யப்பட்டு அடுத்த சில மாதங்களில் பிரசவமான தனது மகனுடனும், மனைவியுடனும் கதைப்பதற்குக்கூட இவருக்கு அனுமதி அரிதாகவே வழங்கப்படுகிறது. அரசாங்கத்தினால் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு வழங்கப்படும்
புனர்வாழ்வு நடவடிக்கைகளை மிகமோசமாகச் சாடியுள்ள இந்த அறிக்கை, சுயவிருப்பின்
பேரிலேயே புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவருவதாக உத்தியோகபூர்வமாகத்
தெரிவிக்கப்படுகின்றபோதிலும், வன்முறையினால் இது சின்னாபின்னமாகியிருப்பதாகவும்,
பலசந்தர்ப்பங்களில் இது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாது இவர்களை மிகநீண்டகாலம் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கான ஒரு ஆயுதமாகப்
பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறது. இலங்கையில் அண்மையில் முடிவுக்கு வந்த இந்த இனப்பிரச்சனையை ஒரு கடந்தகால
வரலாறாகப் பார்க்க ஆவலாக இருக்கின்ற வெளியுலகம், தமிழ் அரசியல் கைதிகள்
முகம்கொடுத்துவரும் சித்திரவதைகளையும், ஏனைய மனித உரிமை மீறல்களையும்,
கவனத்தில் எடுப்பதில்லை என்று சாடுகிறது “இலங்கையில் சமாதானத்திற்கும் நீதிக்குமான
பிரச்சாரம்” என்ற அமைப்பின் இந்த அறிக்கை. இந்த அமைப்பின் பணிப்பாளர் வ்றெட் காவர் கருத்து வெளியிடுகையில், “இந்த
அறிக்கையானது போரின்போது இரண்டு தரப்பினராலும் பாரியளவில் மேற்கொள்ளப்பட்ட
யுத்தக்குற்றங்கள் மட்டுமல்ல, சித்திரவதை மற்றும் கண்மூடித்தனமாகச் சிறைவைத்தல்
போன்ற ஏனைய மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக்
கொண்டிருக்கின்றன என்பதனை முக்கியமாக நினைவு படுத்துகிறது” என்று தெரிவித்தார். “இவ்வாறான ஆதாரங்கள் தெளிவாக உள்ளநிலையிலும், பிரித்தானிய அரசு புகலிடம்
கோருவோரைத் தொடர்ந்தும் திருப்பியனுப்ப முயன்று வரும் இந்த நிலையில் இந்த
அறிக்கை மிகவும் முக்கியமானது. ஏனெனில், இவ்வாறு திருப்பி அனுப்பப்படுவோர்
அந்நாட்டு அரசினால் பிரச்சனைக்குரியவர்கள் என்று கருதப்படுவதோடு, அவர்கள்
சித்திரவதை, கொலை, கற்பழிப்பு மற்றும் கண்மூடித்தனமாக சிறைவைக்கப்படுதல் போன்ற
அபாயங்களுக்கும் உள்ளாகிறார்கள்”. “கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு இடம்பெற்றால் அதில்
தான் பங்கேற்க மாட்டேன் என்று அறிவிப்பதனூடாக டேவிட் கமரன்
தனது தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும்”. இலங்கைத் தீவு தற்போது புத்துயிரூட்டப்பட்ட
ஒரு சுற்றுலாத்துறையினை அனுபவித்து வருகிறது. “லோன்லி பிளனட்” எனப்படும்
சுற்றுலாவிற்கான வழிகாட்டி நூல், இலங்கையை 2013 ஆம் ஆண்டின் தனது சிறந்த
சுற்றுலா மையம் என்று தெரிந்தெடுத்திருக்கிறது.
No comments
Post a Comment