Latest News

March 29, 2013

இலங்கையில் ஜெ. வைகோ, கொடும்பாவி எரிப்பு… இந்திய பணியாளர்கள்… மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு
by admin - 0

கொழும்பு: இலங்கையில் பணிபுரியும் இந்தியர்களுக்கும், அங்கு கல்வி பயிலச் சென்றுள்ள மாணவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இலங்கை அரசுக்கு எதிராக போராடி வரும் மதிமுக தலைவர் வைகோ, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் கொடும்பாவிகளை சிங்களர்கள் எரித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பாலசுப்ரமணியன், லட்சுமி தம்பதியினர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொழும்பு நகரில் வசித்து வருகின்றனர்.

அங்குள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உயரதிகாரியாக பணிபுரிகிறார் பாலசுப்ரமணியன், அவரது மனைவி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியில் இருக்கிறார்.

தற்போது இலங்கை அரசுக்கு எதிராக தமிழக அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருவதால் இலங்கையில் உள்ள இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக இந்தியா பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு பணியில் இருப்பவர்களை வேலையை ராஜினாமா செய்யச் சொல்கின்றனர்.

இதில் பாலசுப்ரமணியமும் அவரது மகன்களும் இலங்கை பாஸ்போர்ட் வைத்துள்ளனர். அவரது மனைவி லட்சுமி இந்திய நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கிறார் என்பதால் அவருக்கு பணியை உடனடியாக ராஜினாமா செய்ய நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 8 பேருக்கு வேலை போயிருக்கிறது.

இது தவிர அங்கு கல்வி பயிலும் மாணவர்களை உடனடியாக வெளியேறச் சொல்லியிருக்கின்றனர். இந்தியாவில் போய் படித்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனராம்.

இலங்கை தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துகின்றனர். இந்திய பாஸ்போர்ட் வைத்துக் கொண்டு பணிபுரிபவர்களை உடனடியாக பணியை விட்டு நீக்கவேண்டும் என்று அங்குள்ள தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டிருக்கின்றனராம். இந்த தகவலை தூத்துக்குடியில் வழக்கறிஞராக பணிபுரியும் ஆறுமுகவேலன் என்பவரும், பணியில் இருந்து ராஜினாமா செய்த இலங்கையைச் சேர்ந்த லட்சுமியும் தெரிவித்தனர்.

கொடும்பாவி எரிப்பு

இதனிடையே கொழும்புவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் கொடும்பாவியை எரித்து சிங்களர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர்கள் விரட்டியடிப்பு

அதேபோல் திரிகோணமலைக்கு பூஜை செய்ய சென்ற தமிழக பூசாரிகளை அடித்து துரத்தியுள்ளனர்.

இலங்கையில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் சென்னை வந்து செல்லாமல் நேரடியாக பீகாருக்கே விமானம் செல்லும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் சிங்களர்கள் யாரும் தமிழ்நாட்டிற்குச் செல்ல வேண்டாம் எனவும், சென்னையைத் தவிர இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்று அங்குள்ள வானொலி, தொலைக்காட்சிகளில் அறிவித்துள்ளனர்.


« PREV
NEXT »

No comments