Latest News

February 11, 2013

இலங்கையில் செவ்வாய்க்கிழமை முதல் விஸ்வரூபம்!
by admin - 0

மூன்று காட்சிகள் நீக்கப்பட்டு விஸ்வரூபம் திரைப்படம் காண்பிக்கப்படும்: அமைச்சர்

கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து விஸ்வரூபம் திரைப்படம் நாட்டின் திரையரங்குகளில் காண்பிக்கப்படும் என்று இலங்கையின் கலை மற்றும் கலாசாரத் துறைக்கான அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தொடர்புடைய விடயங்கள்

மனித உரிமை
முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பைக் காரணம் காட்டி விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு ஆரம்பத்தில் தமிழக அரசு தடைவிதித்தது. இந்த பின்னணியிலேயே இலங்கையிலும் படத்தை தற்காலிகமாக இடைநிறுத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
கலை கலாசார அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க

தமிழகத்தில் முஸ்லிம் அமைப்புகளுடன் காணப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து அந்தத் திரைப்படத்திற்கான தடையை அரசு நீக்கியது. அங்கு திரையரங்குகளில் தற்போது படம் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையிலேயே இலங்கையிலும் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையை அரசாங்கம் நீக்கியிருக்கிறது.
முஸ்லிம் அமைப்புகளை அழைத்து திரைப்படம் காண்பிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் படத்தில் மூன்று காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டதாகவும் அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார்.


‘ஒருவர் தூக்கிலிடப்படும் காட்சி, கழுத்து வெட்டப்படும் காட்சி உள்ளிட்ட மூன்று காட்சிகளை மட்டும் நாங்கள் நீக்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் 7 காட்சிகளை நீக்கினார்கள், ஆனால் நாங்கள் மூன்று காட்சிகளை மட்டுமே நீக்கியிருக்கிறோம்’ என்று அமைச்சர் ஏக்கநாயக்க பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

மூன்று காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு திரைப்படத்தை வெளியிடும் இலங்கைத் தணிக்கைச் சபையின் தீர்மானத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் முஸ்லிம் தலைவர்களிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் வரவில்லை, அவர்களின் இணக்கத்துடனேயே திரைப்படம் வெளியாகிறது என்றும் இலங்கையின் கலை மற்றும் கலாசாரத் துறைக்கான அமைச்சர் தெரிவித்தார்.
முஸ்லிம் அமைப்பு கருத்து

இதேவேளை, மூன்று காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எடுத்த முடிவு சரியானது அல்ல என்று இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த அப்துல் ராசீக் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அமைப்புகளின் உடன்பாடின்றியே திரைப்படத்தை வெளியிட அரசு முடிவெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் குறித்த படத்தை முற்றாகத் தடைசெய்ய வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.

Share News:


« PREV
NEXT »

No comments