Latest News

February 11, 2013

இலங்கை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முடிவு
by admin - 0

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணையின் பின்னர், இலங்கை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முடிவுசெய்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

தனக்கு இருக்கும் தற்துணிவின் அடிப்படையிலேயே அவர் இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்கு கொண்டுசெல்வார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின. ஐ.நா.மனித உரிமைகள் சபையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு தொடர்ந்தும் பின்னடித்துவருகிறது.

இந்நிலையில் இம்முறையும் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணையொன்றை அமெரிக்கா ஜெனிவாக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளது.

அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை விவகாரத்தை மேலதிக நடவடிக்கைகளுக்காக ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு தனது தற்துணிவின் அடிப்படையில் எடுத்துச்செல்கிறார் என்று கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் பின்னர் இலங்கை அரசு மனித உரிமை விடயங்களில் அதிக கவனம் செலுத்தும் என்று உலக நாடுகள் பலவும் எதிர்பார்த்தன.

ஆயினும் அந்தப் பிரேரணையை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு தொடர்ந்தும் இழுத்தடிப்பைச் செய்துவருகிறது. அத்துடன் நாட்டின் மனித உரிமை விடயங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என ஐ.நா. முகவர் அமைப்புக்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன் சட்டத்தின் ஆட்சியும் இலங்கையில் கேள்விக்குறியான நிலையில் உள்ளது என உலக நாடுகள் பலவும் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் இலங்கை விவகாரத்தை இம்முறை ஐ.நா.மனித உரிமைகள் சபையில் மிகக் கவனமாகக் கையாள்வதற்கு மேற்கு நாடுகளும், இந்தியாவும் தீர்மானித்துள்ளன.

இதன் வெளிப்பாடாக கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட பிரேரணையை விடவும் இம்முறை வரவுள்ள பிரேரணை மிகக் கடுமையானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பிரேரணை அங்கு நிறைவேற்றப்பட்ட பின்னர், இலங்கை விவகாரத்தை மேலதிக நடவடிக்கைகளுக்காக ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டுசெல்வதற்கு மனித உரிமை ஆணையாளர் தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டன.

ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தல், ஐ.நா. அமைதிப் படையை நிலைநிறுத்தல், இராணுவ ரீதியான அழுத்தங்கள் வழங்கல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆயினும் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் சீனாவும், ரஷ்யாவும் "வீட்டோ' அதிகாரத்தைக் கொண்டுள்ளதால் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டுவர இயலாது என்று மூத்த அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இலங்கை விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என மேற்குலக நாடுகள் விடாப்பிடியாக இருப்பதால் பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேறும் சாத்தியம் உள்ளதாக கொழும்பு இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
« PREV
NEXT »

No comments