Latest News

January 01, 2013

அமெரிக்க பணக்காரர்களுக்கு வரி உயர்வு - முடிவுக்கு வந்தது ஃபிஸ்கல் க்ளிஃப்!
by admin - 0

வாஷிங்டன்(யு.எஸ்): தானாகவே வரி உயர்வுக்கு வழிவகுக்கும் ‘ஃபிஸ்கல் க்ளிஃப்' ஐ முடிவுக்கு கொண்டுவரும் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவர் ஜோ பைடன் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு செனட் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இது நாளைக்குள் ஓட்டுக்கு விடப்பட்டு நடைமுறைக்கு வரும். சொன்னதை செய்த ஒபாமா டிசம்பர் 31, ம் தேதிக்குள் புதிய மசோதா நிறைவேறாவிட்டால், இயற்கையாகவே வருமான வரி உள்ளிட்ட வரிகள் க்ளிண்டன் ஆட்சிகால அளவிற்கு மாறிவிடும் வகையில் புஷ் ஆட்சியில் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன. அதை மாற்றியமைக்க ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியினருக்கும், எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியினருக்கும் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் நேற்று வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந் நிலையில் துணை அதிபர் ஜோ பைடனை, பேச்சு வார்த்தைக்கு களம் இறக்கினார் அதிபர் ஒபாமா. குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர்களுடன் தொடர் பேச்சு வார்த்தை நடத்தினார். இறுதியில், 450 ஆயிரம் டாலர் வரை வருமானம் உள்ள குடும்பத்திற்கு புஷ் ஆட்சிக்கால வருமான வரியை நிரந்தரமாக நீட்டிப்பு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிபர் ஒபாமா, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நடுத்தர வர்க்கத்தினரை வருமான வரி உயர்விலிருந்து காப்பாற்றி உள்ளார். 450 ஆயிரத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 39.6 சதவீதமாக, க்ளிண்டன் ஆட்சிகால அளவிற்கு, வருமான வரி உயர்கிறது. மேலும் முதலீட்டு லாபத்திற்கு (Capital Gain) 15 சதவீத்த்திலிருந்து 20 சதவீதமாக உயர்கிறது. தாய் தந்தையிடமிருந்து பிள்ளைகளுக்கு கிடைக்கும் 'வாரிசு சொத்து மதிப்பு 5 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தால், அதன் மீதான வரி' (Estate Tax) 35 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்கிறது. மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் முந்தைய அதிபர் புஷ் இரண்டு சதவீத சம்பள வரி குறைப்பு (Payroll Tax cut) கொடுத்திருந்தார். அதுவும் இப்போது நீக்கப்படுவதால், எல்லோருடைய சம்பள கவரிலும் போன மாதத்தை விட அடுத்த மாதம் 'வருமானம் கட்' ஆகிறது . செனட் சபையில் திங்கட்கிழமை தீர்மானம் செனட் உறுப்பினர்களின் இந்த சமரச ஒப்பந்தம் இன்று வாக்கெடுப்புக்கு வருகிறது. செனட் சபையில் நிறைவேறிய பிறகு, காங்கிரஸ் சபைக்கு அனுப்பப்படும். காங்கிரஸ் சபையில் குடியரசுக் கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தீர்மானம் புதன் கிழமைக்குள் நிறைவேறும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானம் நிறைவேறா விட்டால் சராசரி அமெரிக்கரின் வருமான வரி 3346 டாலர் உயரும். அதன் தாக்கம் குடியரசுக் கட்சியினருக்கு எதிராகவே அமையும் என்பதால் வேறு எந்த சிக்கலும் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.



« PREV
NEXT »

No comments