ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று(13.11.12) வெளிவந்த படமான துப்பாக்கி எதிர்பார்ப்புக்கு சற்றும் குறையாமல் அரங்கம் நிறைந்த காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. துப்பாக்கி படத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இப்படத்தில் இஸ்லாமியர்களை விமர்சித்திருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தேசிய லீக் வற்புறுத்தி உள்ளது.
கமல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தின் டிரெய்லர் வெளியான பின் கமலிடமும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி வற்புறுத்தப்பட்டது. கமல் தகுந்த விளக்கங்கள் கொடுத்து இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கவில்லை என கூறிவிட்டதால் இந்த பிரச்சனை ஓய்ந்திருந்தது. இரண்டு பெரிய பட்ஜெட் படங்களும் ஒரே மாதிரியான பிரச்சனையை சந்தித்துள்ள வேலையில் துப்பாக்கி படத்தின் ரிலீஸுக்குப் பிறகு மற்றொரு செய்தி திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
துப்பாக்கி படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று, ஒரே நேரத்தில் 12 ”ஸ்லீப்பர் செல்” தீவிரவாதிகளை சுட்டுக்கொல்லும் காட்சி தான். ஆனால் 12 பேரை ஒரே நேரத்தில் கொல்லும் திட்டமும், “ஸ்லீப்பர் செல்” என்ற தீவிரவாதிகளின் கையாட்களும் வரும் காட்சிகள் ‘விஸ்வரூபம்’ படத்திலும் இடம்பெறுகிறதாம். முதலில் துப்பாக்கி படம் ரிலீஸாகிவிட்டதால் விஸ்வரூபம் படத்தில் இந்த காட்சிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுமா? என்று பேசிக்கொள்கின்றனர்.

No comments
Post a Comment