Latest News

June 09, 2012

பயிலுநர் பதவிக்கும் அனுபவம் வேண்டுமாம்; பட்டதாரிகளுக்கு நேர்முகத்தேர்வில் நேர்ந்த அவலம்
by admin - 0

பட்டதாரிப் பயிலுநர் பதவிக்கான நேர்முகத்தேர்வின் போது "உங்களுக்கு தொழில் முன்னனுபவம் உண்டா?'' என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. பயிலுநர் பதவிக்கு முன்னனுபவத் தொழிற்சான்றிதழைக் கேட்பது எந்தவிதத்தில் நியாயம் என்று பட்டதாரிகள் இது குறித்து விசனம் தெரிவித்துள்ளனர்.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பல வருடங்களாகியும் வேலைவாய்ப்பின்றிக் காத்திருக்கும் பட்டதாரிகளை பயிலுநர் பதவிகளுக்கு இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு கடந்த 5ஆம் திகதி முதல் நேற்றுவரை 3 தினங்கள் நடைபெற்றது.

இந்த நேர்முகத் தேர்வு குறித்து அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில் முன்னனுபவத் தொழிற்சான்றிதழும் ஒரு விடயமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது பட்டதாரிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.அரச உத்தியோகம் கிடைக்கும் என்றெண்ணி பல வருடங்களாகக் காத்திருந்த பட்டதாரிகளிடம் எவ்வாறு முன்னனுபவத் தொழிற்சான்றிதழ் இருக்க முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் எந்தவித தொழில் முன்னனுபவமும் அற்றவர் என்பதைக் குறிக்கவே பயிலுநர் என்ற பதம் பயன்படுத் தப்படுகிறது. இந்த நிலையில் பட்டதாரிப் பயிலுநர் பதவிக்கு எதற்காக முன்னனுபவச் சான்றிதழ் என்ற விடயமும் பட்டதாரிகளுக்குப் புரியாத விடயமாகவே இருந்தது. எனினும் நேர்முகத் தேர்வின் போது குறித்த முன்னனுபவச் சான்றிதழ் குறித்து அதிகம் வினவமாட்டார்கள் என்றும் பட்டதாரிகள் எண்ணினர்.

ஆனாலும் முதற்கேள்வியாக முன்னனுபவம் உண்டா? என்பதே கேட்கப்பட்டது. இதனால் 2ஆம், 3ஆம் தினங்களில் நேர்முகத் தேர்வுக்குத் தோற்றிய பட்டதாரிகள் தொழிற்பயிற்சி முன்னனுபவச் சான்றிதழைப் பெறுவதற்காக தாம் தற்காலிகமாகப் பணி புரிந்த அலுவலகங்களுக்கு முன்னால் தவம் கிடந்ததையும் அவதானிக்க முடிந்தது.

« PREV
NEXT »

No comments