Latest News

June 08, 2012

நூற்றாண்டின் இறுதியில் பூமியின் நிலைமை தலைகீழாகிவிடும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by admin - 0

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி பரப்பானது நேற்று இருந்தது போல் இன்றில்லை. இன்று இருப்பது போல் நாளை இல்லை என்ற நிலையில் புதுப்புது மாற்றங்களால் நிறைந்து கொண்டே போகிறது.. இந்த மாற்றங்கள் ரசிப்புக்குரியதோ வியப்புக்குரியதோ அல்ல... இந்த பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இது என்கிறது அறிவியல் உலகம்...

பெருகி வரும் மக்கள் தொகையால் நீர், வனம் மற்றும் விளைநிலங்களின் பயன்பாடு என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதன் விளைவுதான் இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை எதிர்கொள்ளப் போகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறைகள் போன்றவை இல்லாத ஒரு உலகம் இருந்த நிலையை நோக்கி இப்பொழுது நகர்ந்து கொண்டிருப்பதாகவும் நூற்றாண்டின் இறுதியில் அனேகமாக பூமியின் அமைவிடமே விசித்திரத்துக்குரியதாகவும் இருந்துவிடும் என்றும் அமெரிக்காவின் கலிபோனியா விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இவர்கள் மட்டுமல்ல.. புவி வெப்பமயமாதல் மற்றும் சூழலியல் தொடர்பான விஞ்ஞானிகள் பலரும் இன்னும் அதிர்ச்சியூட்டும் ஆருடங்களை வெளியிட்டு வருகின்றனர். நம் கண்கூடே நேற்று நாம் பார்த்த பறைவியினங்களும் தாவர இனங்களும் காட்சிப் பொருளாகிவிட்ட நிலையில் இனிவரும் காலங்களும் இப்படித்தான் இருக்குமாம்! பல விலங்கினங்கள், தாவர இனங்கள் பூண்டோடு அழிந்து போவது மட்டுமல்ல.. புதிய புதிய விலங்கினங்களும் தாவர இனங்களும் விஸ்வரூபமாக பிறப்பெடுத்து பேரிடர்களுக்கு வழிவகை செய்யக் கூடிய சாத்தியங்களும் இருக்கின்றனவாம்.

நாம் இப்பொழுது பனிப்பாறைகளின் கடைசி யுகத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.. இன்னும் சிறிதுகாலம்தான்... பனிப்பாறைகள் இல்லாத ஒரு உலகம் உருவாகிவிடக் கூடும். தொழில்துறை வளர்ச்சியினால் வளிமண்டத்தில் 35 விழுக்காடு அளவுக்கு கரியமில வாயுவை செலுத்தியிருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக சொல்லலாம்..

பூமிப்பரப்பில் இப்பொழுது 43 விழுக்காடு பரப்பானது நகரங்களாகவும் விளைநிலங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டது. பனிப்பிரதேசத்தின் பரப்பளவு 30 சதவீதமாக இருக்கிறது. எஞ்சிய நிலப்பரப்பும் பெருகிவரும் மக்கள் தொகையால் நிச்சயம் வேட்டையாடப்பட்டு பூமிப் பந்து பிரளயத்தை எதிர்நோக்கலாம்.

மாற்றம் என்பது மட்டுமே இந்த பூமிப் பந்தில் மாறாதது என்கிறபோது மனிதர்களும் இன்ன பிற உயிரினங்களும் தாவரங்களும் மாறிக்கொண்டே இருப்பதும் கூட புதியதோர் உலகுதானோ?

« PREV
NEXT »

No comments