Latest News

April 11, 2012

நாட்டின் வேறு எந்த ஒரு பகுதியையும் போலவே யாழ்ப்பாணமும் இன்று மாறிவிட்டது குற்றங்கள் அதிகரித்திருக்கின்றமையானது ஆதாரம்
by admin - 0

யாழ்ப்பாணத்தில் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றமையானது அங்கு இயல்பு நிலை திரும்பி இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது என்று கூறியிருக்கிறார் முன்னாள் சட்ட மா அதிபரும் அமைச்சரவை ஆலோசகருமான மொஹான் பீரிஸ்.
"லக்பிம' ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 29 வருடங்களாக யாழ்ப்பாணம் படையினரின் இறுக்கமான கட்டுப்பாட்டில் இருந்ததால் அங்கு மக்களால் குற்றங்களைச் செய்ய முடியவில்லை என்றும் இப்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால் குற்றவாளிகளும் தமது பணிகளுக்குத் திரும்பியுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.





அந்தச் செவ்வியில் பீரிஸ் தெரிவித்திருப்பதாவது:

வடக்கு கிழக்கில் துணைப் படைகளிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட்டு விட்டன. அரசுக்கு ஆதரவான குழுக்களிடம் இருந்துகூட முழுமையாக ஆயுதங்கள் களையப்பட்டுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் இந்த விடயத்தில் மிகத் தீவிரமாகச் செயலாற்றினார். விதிகளைக் கடுமையாக நடை முறைப்படுத்தினார்.
அங்கு ஆயுதங்களுடன் நடமாடுவதற்கு எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. யாராவது ஆயுதங்களுடன் காணப்படுவதானால் அல்லது நடமாடுவதானால் அவற்றைப் பயன்படுத்து வதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக் கப்படுகிறது.

"துணைப்படைகள் ஆயுதங்களுடன் பகிரங்கமாக நடமாடுவதில்லை தான். ஆனால், ஆயுதங்களுடன் ஆங்காங்கே கொள்ளைகள் நடக்கின்றனவே?''
நாடு முழுவதும்தான் ஆயுதக் கொள்ளைகள் நடக்கின்றன. என்ன வித்தியாசம் என்றால்..... குற்றங்களே நடக்காமல் இருப்பதற்கு, யாழ்ப்பாணம் ஒன்றும் இந்த பூமியில் இருக்கும் சொர்க்கம் அல்ல என்பதை நினைவில் வைத்திருங்கள்.

கடந்த 29 வருடங்களாக அங்கு குற்றங்கள் நடக்கவில்லை. ஏனென்றால் அந்தப் பகுதி அளவுக்கதிகமாக இராணுவ மயப்படுத்தப்பட்டிருந்தது. அதனால் பொது மக்கள் குற்றங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் இருக்கவில்லை. இப்போது அங்கு நடக்கும் குற்றங்கள் எதனைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன என்றால், யாழ்ப்பாணத்தில் அமைதி திரும்பி விட்டது என்பதைத் தான்.

தொழில் ரீதியான கொள்ளையர்களும் திருடர்களும் தமது வேலைக்குத் திரும்பிவிட் டார்கள். "பிக்பொக்கெட்' திருடர்களும் தங்கள் வேலைக்குத் திரும்பியிருக்கிறார்கள். அதேபோன்றுதான் பாலியல் வன்புணர்வுகளும் கொலைகளும். இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால் துர்நடத்தைகளும் குற்றங்களும் அங்கு நிகழ ஆரம்பித்துள்ளன.

இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தை பாதுகாப்பான இடமாகப் பேணி வந்த, அது அனுபவித்து வந்த மேலதிக பாதுகாப்பு வசதிகள் இப்போது அங்கு இல்லா மல் போய்விட்டது. வேறு வார்த்தைகளில் சொன்னால், படைக் குவிப்பால் இதுவரை காலமும் ஒடுக்கப்பட்டிருந்த குற்றங்கள் உள்ளடங்கலான பொதுமக்களின் நடத்தை மற்றும் பொது வாழ்க்கை என்பன அங்கு மீளத் திரும்பியுள்ளன.

அதைக் கையாள்வதற்கு அந்தச் சமூகம் தனக்கான சொந்தப் பொறிமுறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நாட்டின் ஏனைய இடங்களைப் போலவே பொலிஸார் இந்த விடயங்களைக் கையாள்வார்கள்.

நாட்டின் வேறு எந்த ஒரு பகுதியையும் போலவே யாழ்ப்பாணமும் இன்று மாறிவிட்டது. அங்கு மக்கள் வாழ்கிறார்கள், சிரிக்கிறார்கள், சாகிறார்கள்

« PREV
NEXT »

No comments