Latest News

April 09, 2012

கூடங்குளம் அணு மின் நிலையத்தால் எங்களுக்கு அச்சுறுத்தல்:இலங்கை
by admin - 0

கூடங்குளம் அணு மின் நிலையத்தால் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருவதால் சுமார் 6 மாதங்கள் கழித்து கடந்த மாதம் 19ம் தேதி தான் அது திறக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இன்னும் 2 மாதத்தில் முதல் உலையில் மின் உற்பத்தி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தால் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இது குறித்து இலங்கையைச் சேர்ந்த அணு உலை வல்லுனர்களும், ஆராய்ச்சியாளர்களும் கூறுகையில்,

கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மட்டுமின்றி இலங்கைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எதிர்பாராவிதமாக அங்கு கதிர்வீச்சு ஏற்பட்டால் அது இலங்கை வரை பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதியில் இருந்து வெறும் 240 கி.மீ. தூரத்தில் தான் கூடங்குளம் அணு மின் நிலையம் அமைந்துள்ளது.

பசுமை வீடுகளின் வாயுக்களின் வெளியேற்றம் அதிகரித்தால்(கிரீன் ஹவுஸ் கேஸஸ்) புயல், பெருமழை போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும். இந்தியாவில் இது வரை அதிகபட்சமாக 200 மெகாவாட் திறன் கொண்ட அணு உலைகளே அமைக்கப்பட்டன. தற்போது கூடங்குளத்தில் முதன்முறையாக 1000 மெகாவாட் திறன் கொண்ட அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அந்த அணு உலைகளை நிர்வாகிப்பதில் சிறிய தவறு ஏற்பட்டாலும் பெரிய ஆபத்து ஏற்படும் என்றனர்.

இது பற்றி இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் படாலி சம்பிகா ரணாவகா கூறுகையில்,

கூடங்குளம் அணு உலை எங்களுக்கு அச்சத்தை அளிக்கிறது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் நாங்கள் இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்த விவகாரத்தில் பரஸ்பரம் புரிந்து கொள்ளுதல் அடிப்படையில் செயல்படவே விரும்புகிறோம். கூடங்குளம் அணு மின் நிலையத்தால் இலங்கைக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்று எரிசக்தி ஆணையம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகராம் குறித்து சர்வதேச அணு சக்தி ஆணையத்திற்கும் தெரிவித்துள்ளோம். எங்கள் கடிதத்திற்கு இந்தியா அளிக்கும் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கும்போது சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் வழிகாட்டுதல்படி இந்தியா நடக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

« PREV
NEXT »

No comments