அழிவின் எச்சங்களும் இராணுவ பிரசன்னமுமே யாழ்பாணத்தின் அடையாளமாக உள்ளது - புதியதலைமுறை தொலைகாட்சி.
06 02 2012
தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகிவரும் புதியதலைமுறை தொலைக்காட்சி குழுவினர் தற்போதைய உண்மைநிலையினை கண்டறிவதற்காக இலங்கைக்கு பயணமாகியிருந்தனர்.
அங்கு அவர்கள் நேரில் கண்டவற்றை "உண்மையைத்தேடி இலங்கையில் புதியதலைமுறை" என்ற நிகழ்சியை இன்று தொகுத்து வழங்கியுள்ளது. இரவு எட்டுமணிக்கு ஒளிபரப்பான நிகழ்ச்சியின் தொடர்ச்சி நாளையும் இடம்பெற உள்ளது.
சென்னையில் இருந்து கொழும்பு சென்ற புதியதலைமுறை செய்திக் குழுவினர் தமிழர் பகுதிகளிற்கு செல்ல சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பின்னர் அனுமதி வழங்கப்படுவதும் மீண்டும் மறுக்கப்படுவதுமாக சில நிமிடங்களிலேயே இவ்வாறு பலதடவை வழங்கப்படுவதும் மறுக்கப்படுவதுமாக இருந்து பின்னர் ஒருவழியாக வடபகுதிக்கு செல்வதற்கு அனுமதிகிடைத்ததாக தெரிவித்துள்ளார்கள்.
கொழும்பில் இறங்கியதுமே நாகரிகமயமாக்கப்பட்ட நகரமாக தெரிந்த சமயத்தில் முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததை காணக்கூடியதாக இருந்ததாக செய்திக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பின்னர் கொழும்பில் இருந்து யாழ்பாணம் பயணத்தை தொடர்ந்து செய்திக் குழுவினர் ஓமந்தை இராணுவச்சோதனைச்சாவடியில் அனுமதியினை தெரியப்படுத்தி யாழ்பாணம் சென்றதாகவும் அங்கு தங்குவதற்கு விடுதிகள் இன்றி இரண்டு மணிநேரத்திற்கு மேலாக அலைந்து திரிந்து தங்கியதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தின் அடையாளமாக இருந்த பனைமரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு இருந்த சுவடே தெரியாமல் இருப்பதனை வீடியோ ஆதாரத்துடன் வெளிப்படுத்திய புதியதலைமுறை குழுவினர் தமிழர் பகுதிகளில் நீக்கமற நிறைந்துவிட்ட சிங்கள இராணுவத்தினரின் பிரசன்னத்தையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பத்து தமிழர்களிற்கு ஒரு இராணுவவீரன் என்ற ரீதியில் சிங்கள இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டடுள்ளார்கள். வீதிகளில் பயணிக்கும் போது திடீர் திடீர் என மக்களை மறித்து விசாரணை செய்வதும் சோதனை மேற்கொள்வதும் இயல்பாகிவிட்டதையும் சிங்களவர்கள் என்றால்கண்டுகொள்ளாமல் விடுவதையும் ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளது புதியதலைமுறை செய்திக்குழு.
யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக பார்க்கும் போது இயல்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக தோன்றினாலும் அங்குள்ள தமிழர்கள் ஒருவிதமான அச்சசூழலில் வாழ்ந்துவருகின்றதை படம்பிடித்துக்காட்டியுள்ளது புதியதலைமுறை தொலைக்காட்சி. வீதிகள் எங்கும் சிங்கள இராணுவத்தினர் ஆக்கிரமித்து நிற்பதநாலேயே இந்த அச்சுறுத்தலான சூழல் ஏற்பட்டுள்ளதையும் காண்பித்துள்ளது.
இவ்வாறு அச்சுறுத்தலான சூழல் நிலவுவதை அங்குள்ள மக்களைப்பார்க்கும் போது தெரிவதாக கூறியுள்ளார்கள். வீதிகளில் எதிர்படும் இருவர் சந்தித்து கதைத்துக் கொண்டிருக்கும் சூழலில் அவர்களை யாராவது கடந்துசெல்வது தெரிந்தால் கதையினை மாற்றி வேறுவிடையங்களை கதைப்பதை அவதானிக்க முடிந்ததாக யாழ்சென்று உண்மை நிலைகளை அறிந்துவந்த செய்திக்குழுவினர் தெரியப்படுத்தியுள்ளனர்.
வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் இருந்து தப்பித்து செல்லும்போது கைவிட்டுச் சென்ற கால்நடைகளும் பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டு காணாமல்போயுள்ளதையும் பறிகொடுத்த மக்களது வாக்குமூலமாக பதிவுசெய்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் கடவுள்மீதுள்ள நம்பிக்கையாள்தான் மீண்டும சொந்த இடங்களிற்கு திரும்பியுள்ளதாகவும் ஈழத்தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மரணம் விளையாடிய மண்ணில் இப்போது விலைவாசி உயர்வால் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தினமும் ஒரு டொலர் வருமானத்தில் ஒவ்வொரு தமிழர்களும் வாழ்க்கையினை நடாத்திவருவதாகவும் தெரிவத்துள்ளது.
போரினால் தமிழர்களது வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுவிட்ட போதும் அடுத்த தலைமுறை நம்பிக்கையுடன் கல்வியை ஊக்கமுடன் படித்துவருவதையும் தமது புகைப்படக் கருவிகளினூடாக வெளியுலகிற்கு காட்டியுள்ள புதியதலைமுறை தொலைக்காட்சியின் உண்மைதேடிய பயணம் நாளை கிளிநொச்சிக்கு பயணமாகின்றது.
No comments
Post a Comment