Latest News

February 12, 2012

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த்
by admin - 0


விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர் சங்கரலிங்கத்தின் இல்ல திருமண விழா இன்று அருப்புக்கோட்டையில் நடந்தது. இதில் தே.மு.தி.க. நிறுவனரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:

மக்கள் குறைகளை போக்குவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு போகிறோம். அங்கு மக்கள் குறைகளை தீர்க்க பேசுகிறோம். எதிர்கட்சி உறுப்பினர்களை பார்த்து ஆளுங்கட்சியினர் ஒருமையில் பேசியதால்தான் நான் கைநீட்டி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.

சட்டத்தில் கை நீட்டி பேசக் கூடாது என்று கூறவில்லை. சட்டமன்ற உரிமைக்குழுவை கூட்டி என்னை 10 நாட்கள் சஸ்பெண்டு செய்து உள்ளனர். இந்த வேகத்தை தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் காட்ட வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு என்னை சஸ்பெண்டு செய்து உள்ளனர்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் தான் முதன் முதலில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். அதன் பின்னர்தான் மற்ற அரசியல் கட்சியினர் அந்த பகுதிகளுக்கு வந்தனர். மின்வெட்டு 2 மாதத்திற்குள் நீக்கி விடுவோம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

அருப்புக்கோட்டை பகுதியில் நெசவாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். தற்போது நிலவும் மின் வெட்டால் இப்பகுதியில் நெசவு தொழில் முற்றிலும் நசுங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மின்வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த தேர்தலில் 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறிய தி.மு.க. தற்போது 6 ஆயிரம் ஓட்டுகள் கூட பெற முடியாத நிலையில் உள்ளது. இதே நிலைமைதான் அ.தி.மு.க.வுக்கும் ஏற்படும்.

தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை. அ.தி.மு.க., எம்.ஜி.ஆரின் கட்சி என்பதால் மரியாதையுடன் இருக்கிறோம். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள். பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். மக்களை ஏமாற்றி ஆட்சி அமைக்கும் எண்ணம் எனக்கு இல்லை.

டான்சி வழக்கு தொடர்பான கோப்பில் கையெழுத்து போட்டு விட்டு பிறகு அது எனது கையெழுத்து இல்லை என்று கூறுகிறார். டான்சி நிலத்தையும் ஒப்படைக்கிறேன் என்று கூறுபவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
« PREV
NEXT »

No comments