Latest News

February 19, 2012

நான் கல்யாணம் செய்து வைத்த நடராஜன் கைதானது வருத்தம் தருகிறது-கருணாநிதி
by admin - 0


என் தலைமையில் கல்யாணம் செய்து கொண்ட நடராஜன் கைது செய்யப்பட்டிருப்பது வருந்தத்தக்கது என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

திருச்சி வந்த அவர் அங்கு கே.என்.நேரு மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:

- சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நீங்கள் பிரசாரம் செய்வது எப்போது?

அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

- சங்கரன்கோவிலில் அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறதா?

பயன்படுத்தப்படுகிறது, தவறாக. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக.

- பெங்களூர் கோர்ட்டில் சசிகலா அளித்த சாட்சியம் குறித்து உங்கள் கருத்து என்ன?

நான் தற்போது நாடகங்களை நம்புவதில்லை.

- உங்கள் தலைமையில்தான் நடராஜனுக்கும், சசிகலாவுக்கும் திருமணம் நடந்தது. இப்போது நடராஜன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளாரே?

வருந்தத்தக்கது.

- சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித் தனியாக போட்டியிடுவதால் வாக்குகள் சிதறிவிடக் கூடிய நிலை இருப்பது தவிர்க்கப்படுமா?

எதிர்க்கட்சிகள் எல்லாம் அதைப் பற்றி யோசித்தால், நாங்களும் அதுகுறித்து யோசித்து ஒருமித்த முடிவுக்கு வரலாம்.

- சங்கரன்கோவில் தேர்தலில் எதை வைத்து பிரசாரம் செய்வீர்கள்?

ஆட்சியாளர்களின் அராஜகம், அநீதி, அக்கிரமம், மக்கள் நலப்பணிகளை விட்டுவிட்டு மற்ற பணிகளில் தலையிட்டு செயல்படுவது, எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தை இருண்ட மாநிலமாக ஆக்கி உள்ளதை விளக்கி பிரசாரம் செய்வோம்.

- தமிழகத்தில் அடிக்கடி அமைச்சர்கள் மாற்றப்படுவதால் டெலிபோன் டைரக்டரிகூட போட முடியாத நிலை உள்ளதே?

அது டைரக்டரி போடுபவர்களின் கவலை.

- கேரள மாநிலம் கொச்சி கடலில் தமிழக மீனவர்களை இத்தாலி நாட்டு கப்பலில் வந்தவர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவீர்களா?

மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தக்க நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்றார் கருணாநிதி.
« PREV
NEXT »

No comments