அதிமுகவால் துரத்தப்பட்டு விட்டு விட்ட நிலையில், அடுத்து திமுகவை விட்டால் வேறு வழியில்லை என்ற ஒரு இக்கட்டான நிலையில் தனது கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை தேமுதிக நாளை கூட்டியுள்ளது. இக்கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்படும் என்ற பலமான எதிர்பார்ப்பு உள்ளது.
இக்கூட்டத்தில் திமுகவுடான கூட்டணி குறித்த சாதகமான நிலைப்பாடு காணப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டாலும் கூட பச்சையாக அடுத்த கூட்டணி திமுகவுடன் என்ற அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட மாட்டார் என்ற எதிர்பார்ப்பும் பலமாகவே உள்ளது. இருப்பினும் தேமுதிகவின் அடுத்த கூட்டணி திமுகதான் என்ற எண்ணம் கட்சியினர் மத்தியில் இப்போதே வேரூண்ற ஆரம்பித்து விட்டதாக பேச்சு அடிபடுகிறது.
இதை வலியுறுத்தும் வகையில் திமுகவுக்கு எதிராக யாரும் பேச வேண்டாம், செயல்பட வேண்டாம் என்று தனது கட்சியினருக்கு விஜயகாந்த் தரப்பிலிருந்து ரகசிய உத்தரவு போயுள்ளதாக கூறுகிறார்கள்.
திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் தனியாக நில்லுங்கள், எங்களது துணை இல்லாமல் போட்டியிட்டிருந்தால் ஒரு சீட் கூட கிடைத்திருக்காது, எங்களது துணையால்தான் இன்று சட்டசபையில் பல எம்.எல்.ஏக்களுடன் அமர முடிந்திருக்கிறது, உங்களுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் ஆவேசமாக பேச, விஜயகாந்த்தோ கைகளை நீட்டி, நாக்கை மடித்து கண்களை உருட்டி, நரம்பு புடைக்க தாறுமாறாகப் பேச, பின்னர் சட்டசபைக்கு வெளியே ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து பதில் சவால் விட, மொத்தத்தில் அதிமுக, தேமுதிக என்ற கூட்டணிப் பானை படாரென்று உடைந்து போனது.
இப்போது சாயந்து கிடக்கும் தேமுதிகவை தூக்கி நிறுத்தும் முட்டுக் கம்பாக திமுக மறைமுகமாக உருவெடுத்துள்ளது. சட்டசபையிலிருந்து விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை முதல் ஆளாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அதற்காக திமுகவினர் வெளிநடப்பும் செய்தனர். அதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் தேமுதிக மீதான நடவடிக்கையை கண்டித்துள்ளார். இதற்கு உச்சகட்டமாக, மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்தபோது விஜயகாந்த்தும், ஸ்டாலினும் நீண்ட நேரம் பேசிக் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் நடு வானில் வைத்து புதிய கூட்டணிக்கான அஸ்திவாரத்தை விஜயகாந்த் போட்டு விட்டதாக கூறுகிறார்கள்.
இந்தப் பின்னணியில்தான் நாளை சென்னை அருகே வானரகத்தில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகளை விஜயகாந்த் கட்சியினருடன் நடத்தவுள்ளார். குறிப்பாக சங்கரன்கோவிலில் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்கவுள்ளனர். மேலும் எதிர்காலத்தில் திமுகவுடன் இணைந்து செயல்படலாமா அல்லது வழக்கம் போல தனி ஆவர்த்தனம் வாசிக்கலாமா என்பது குறித்தும் விஜயகாந்த் ஆலோசிக்கவுள்ளதாக தெரிகிறது.
நாளைய கூட்டத்தில் பங்கேற்க வருவோருக்கு முக்கிய உத்தரவாக செல்போன் மற்றும் கேமராக்களைக் கொண்டு வரக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். கட்சிக்குள் அதிமுக உளவாளிகள் இருப்பதாக விஜயகாந்த் சந்தேகிப்பதால் இந்த கண்டிப்பான உத்தரவாம்.
நாளை விஜயகாந்த் என்ன முடிவெடுக்கப் போகிறார், தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Post a Comment