Latest News

February 14, 2012

கறுப்புப் பணம் பதுக்குவதில் உலகிலேயே முதலிடம் இந்தியர்களுக்குதான்!
by admin - 0

ரூ 24.5 லட்சம் கோடி அளவுக்கு கறுப்புப் பணம பதுக்கி வைத்துள்ளதன் மூலம், இந்த விஷயத்தில் உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளனர் இந்தியர்கள்.

இந்தத் தகவலை சிபிஐயின் இயக்குநரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊழல் ஒழிப்பு மற்றும் சொத்து மீட்பு பற்றிய சர்வதேச அளவிலான திட்டம் குறித்து சர்வதேச போலீஸ் அமைப்பின் முதலாவது மாநாடு நேற்று டெல்லியில் நடந்தது. 19 நாடுகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் சி.பி.ஐ. இயக்குனர் அமர் பிரதாப் சிங் பேசுகையில், "இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்து, சுவிட்ஸர்லாந்து, மொரீஷியஸ், பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் நாடு, லிச்டென்ஸ்டைன் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் ரூ.24றி லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் அதிக அளவில் கறுப்பு பணம் பதுக்கியவர்களில் இந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

53 சதவீத நாடுகளில் மிக சொற்ப அளவிலேயே ஊழல் நடப்பதாகவும், அங்கு சர்வதேச பண பரிமாற்றம் வெளிப்படையாக நடப்பதாகவும் கூறுகின்றன. மிக, மிக குறைந்த ஊழல் நடக்கும் நாடுகளில் நிïசிலாந்து முதலிடத்திலும், சிங்கப்பூர் 5-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 7-வது இடத்திலும் உள்ளன. ஆனால், அந்த நாடுகள்தான் சட்ட விரோதமாக கறுப்பு பணத்தையும், ஊழல் பணத்தையும் பதுக்கி வைக்க இந்தியர்களுக்கு புகலிடம் கொடுத்து ஆதரிக்கின்றன.

அந்த நாடுகளிடம் இருந்து இந்த சட்டவிரோத பணத்தை மீட்பது தொடர்பான தகவல்களை பெறுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. அந்த நாடுகளுக்கு இடையே போதிய அரசியல் ஒத்துழைப்பு இல்லாததும், ஏழை நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களது கறுப்பு பணத்தை அங்கு பதுக்கி வைப்பதால், அதற்கு இடம் கொடுக்கும் நாடுகளின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதாலும் இந்த கால தாமதமும், சிரமும், வீண் செலவும் உண்டாகிறது.

மேலும், அந்த கறுப்பு பணத்தை கண்டுபிடிப்பதிலும், முடக்குவதிலும், பறிமுதல் செய்வதிலும், மீட்பதிலும் சட்ட ரீதியான சவால்கள் உள்ளன. சட்டவிரோத பணம் பற்றி விசாரிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. நீண்ட காலம் பிடிக்கிறது. மிக அதிக அளவில் செலவு பிடிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நிபுணத்துவமும், அரசியல் உறுதியும் தேவைப்படுகிறது.

2ஜி ஊழல் பணம்

சி.பி.ஐ. சமீபத்தில் விசாரணை நடத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், மதுகோடா ஊழல் போன்ற வழக்குகளில் சட்ட விரோதமான பணம் துபாய், சிங்கப்பூர், மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு முதலில் சென்று, அங்கிருந்து சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு கொண்டு போய் பதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

சட்ட விரோதமாக பணம் பதுக்கும் கிரிமினல்கள் குட்டி, குட்டி கம்பெனிகளை தொடங்கி, ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்குக்கு ஒரு சில மணிகளிலேயே அந்த சட்ட விரோத பணத்தை மாற்றி, பதுக்கி விடுகிறார்கள். வங்கி பரிமாற்றத்துக்கு எல்லை கிடையாது என்பதால் இந்த சட்ட விரோத பண பரிமாற்றம் லகுவாக நடக்கிறது. நாடு விட்டு நாடு பணம் கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறது.

கிரிமினல் நடவடிக்கைகள் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு சட்ட விரோதமாக ரூ.50.5 லட்சம் கோடி கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுவதாக உலக வங்கி மதிப்பிட்டு உள்ளது. இதற்காக வளரும் நாடுகளில் மட்டும் அரசு ஊழியர்களுக்கு ரூ.40 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் உலக வங்கி மதிப்பிட்டு உள்ளது. இந்த சட்ட விரோத பணத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய்தான் மீட்கப்பட்டு இருப்பதாகவும் உலக வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது," என்றார்.
« PREV
NEXT »

No comments