சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கூண்டோடு நீக்கி விட்டார் ஜெயலலலிதா. அவரது ஆதரவு அதிகாரிகளும் கூட இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர்.
இது போக சசிகலா ஆதரவு கட்சிக்காரர்களும் கூட கட்சிப் பொறுப்புகளிலிருந்து தூக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சசிகலா ஆதரவு அமைச்சர்கள் மட்டும் இதுவரை தீண்டப்படாமல் இருக்கின்றனர். இது பலரையும் குழப்பி வருகிறது.
ஆனால் இதற்குப் பின்னணியாக ஒன்றைச் சொல்கிறார்கள். ஆளுநரிடமிருந்து ஜெயலலிதாவுக்குப் போன ஒரு அறிவுறுத்தல்தான் இந்தத் தாமதத்திற்குக் காரணமாம். அதாவது அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவதைத் தவிருங்கள். அது ஆட்சிக்கும், உங்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும். மேலும் ஆட்சி ஸ்திரமில்லாமல் இருக்கிறது என்ற பெரும் அவப் பெயரை ஏற்படுத்தி விடும் என்று ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அட்வைஸ் செய்துள்ளார் என்கிறார்கள்.
இதனால்தான் சசிகலாவை நீக்கிய கையோடு அமைச்சர்களையும் தூக்குவதாக இருந்த முடிவை ஜெயலலிதா தள்ளி வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
இருப்பினும் நீக்கப்படப் போகும் அமைச்சர்களின் பட்டியல் தயாராக இருப்பதாக தெரிகிறது. அதில் 11 பேர் சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரால் பதவிக்கு வந்தவர்களாம். இவர்களில் பலரும் பெரும் பணம் கொடுத்து அமைச்சர் பதவியைப் பிடித்தவர்கள் என்கிறார்கள். மேலும் 4 அமைச்சர்களும் இப்பட்டியலில் உள்ளனர். இவர்கள் சசிகலா தரப்பைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இவர்களின் பணித்திறமை குறித்து திருப்தி இல்லாததால் இவர்களையும் மாற்றி விட முதல்வர் தீர்மானித்துள்ளாராம்.
15 பேரையும் நீக்கி விட்டு முற்றிலும் திறமையான, யாருடைய கோஷ்டியையும் சேராத அமைச்சர்களை நியமிக்க முடிவு செய்துள்ளார் முதல்வர் என்கிறார்கள் கார்டனுக்கு நெருக்கமானவர்கள்.
பொறுமையாக செயல்படுங்கள் என்று ஆளுநர் அறிவுரை கூறியுள்ள போதிலும் கூட, பொங்கலுக்குப் பிறகு மீண்டும் ஒரு தீபாவளியை தமிழகம் காணும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறுகிறது கோட்டை வட்டாரத் தகவல்.
No comments
Post a Comment