கூடங்குளத்தில் மூன்றே மாதங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என இந்திய அணு மின் கழக தலைவரும் இந்திய அணு சக்தி துறையின் செயலாளருமான டாக்டர் ஸ்ரீகுமார் பானார்ஜி கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் என்.ஐ பொறியியல் கல்லூரியில் உலக பேரிடர் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை கருத்தரங்கு நடைபெற்றது. இதனை இந்திய அணு சக்தி துறையின் செயலாளருமான டாக்டர் ஸ்ரீகுமார் பானார்ஜி தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மூன்று மாதங்களில் உற்பத்தி
கூடங்குளம் அணு மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியபோதே அதன் கட்டிட அமைப்பு, ரியாக்டரின் தரம், மக்களின் வாழ்வாதாரம் இவையெல்லாம் நன்கு பரிசோதித்த பின்னரே பணிகள் துவங்கப்பட்டன. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் தோரியம் அதிக அளவில் கிடைக்கிறது. எதிர்காலத்தில இதை கூடங்குளத்தில் பயன்படுத்த முடியும். கூடங்குளம் திட்டம் சுற்று சூழல் பாதுகாப்புக்கு உகந்த திட்டம். இங்கு கதிரியக்கம் குறைந்த அளவில்தான் உள்ளது.
அதிக மின் வெட்டு
காற்றில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் உள்ளூரில் விளக்கு எரிப்பதற்கும், அடிபம்பிற்கும் பயன்படுத்தலாம். பெரிய திட்டங்களுக்கும், மத்திய தொகுப்புக்கு மின்சாரம் வழங்கவும் அணு மின் நிலையம் தேவை. ஒரு நாட்டின் அடிப்படை பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் முக்கிய தேவை. தமிழ்நாட்டில் இன்று மிக அதிக அளவில் மின்வெட்டு இருக்கிறது. அதுவும் மிக குறைந்த அழுத்தமுடைய மின்சாரம் தான் சப்ளை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான 700 மெகா வாட் மின்சாரம் இங்கிருந்து கிடைக்கும் என்றார்.
கூடங்குளத்தில் ஆய்வு
இதன்பிறகு பிற்பகலில் ஸ்ரீகுமார்பானர்ஜி கூடங்குளம் வந்தார். அவருடன் இந்திய அணுசக்தி ஆணைய மனித வள ஆற்றல் பிரிவு உறுப்பினர் அகர்கரும் வந்திருந்தார். பிற்பகல் 3 மணி அளவில் ஸ்ரீகுமார்பானர்ஜி மற்றும் கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி ஆகியோர் அணு உலையை பார்வையிட்டனர்.
அணு உலையின் பராமரிப்பு குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தனர். தற்போதைய நிலையில் போராட்டம் முடிந்தால் எத்தனை நாட்களில் அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்கலாம் என்று அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதன்பின்னர் பானர்ஜி, அகர்கர் இருவரும் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.
No comments
Post a Comment