சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி வீசிய தானே புயல், தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையை சின்னாபின்னமாக்கிவிட்டன.
இந்த புயலுக்கு 48 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலூர் மாவட்டம் தற்போதுதான் ஓரளவு மீளத் தொடங்கியிருந்தாலும், சகஜ நிலை திரும்ப இன்னும் நாளாகும் என்கிறார்கள்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ஓரளவு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது. தனியார் அமைப்புகள், கலைஞர்களும் தங்கள் பங்குக்கு உதவி வருகிறார்கள்.
இந்நிலையில் தானே புயல் நிவாரண நிதிக்கு தன் பங்குக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைத்தார். இதையடுத்து அவர் இன்று தலைமைச் செயலகத்திற்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவரிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
பின்னர் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள், ‘என்ன திடீர் சந்திப்பு?’ என்று கேட்டதற்கு, “இதில் முக்கியம் எதுவும் இல்லை, மரியாதை நிமித்தமான சந்திப்புதான். தானே புயல் நிவாரண நிதி கொடுக்க வந்தேன்,” என்றார்.
புதிய படம் குறித்த கேள்விக்கு, “விரைவில் நல்ல செய்தி வரும்” என்றார் ரஜினி. பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
உடல் நலம் தேறிய பிறகு ரஜினிகாந்த் ஜெயலலிதாவை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
No comments
Post a Comment