Latest News

January 07, 2012

இழைத்த தவறுகளுக்கு நட்டஈடு செலுத்திவிட முடியுமா?
by admin - 0

கண்களை அகலத் திறந்தவாறு வரலாற்றுப் பாதையில் நடந்து வாருங்கள். தவறிப்போன, நீங்களோ நானோ தவறவிட்ட, மறந்து போன, அல்லது வேண்டுமென்றே மழுங்கடிக்கப்பட்ட பல விடயங்கள் குறித்து அப்போது தான் எம்மால் தெரிந்துகொள்ள முடியும். சிங்கள ஊடகவியலாளரான சஞ்ஜீவ லொக்குலியன வன்னிக்கான தனது பயண அனுபவத்தைக் கட்டுரையாக்கி இருக்கிறார். அதிலிருந்து மொழியாக்கம்.

வடக்கிற்கு முன்னுரிமை கொடுத்து அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதாக அரசு காட்டுக் கத்தல் கத்துகிறது. வெளிநாடுகளுக்கு எல்லாம் சொல்கிறது. ஆனால் 2011 ஆண்டளவில் இந்த அரசினால் மேற்கொண்டு முடிக்கப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களின் மொத்த எண்ணிக்கை 5,577. ஆனால் அவற்றில் வடபகுதிக்கானவை வெறும் 33 திட்டங்களே.

உண்மையில் வன்னியில் எந்த வீதிகளையுமே அரசு முழுமையாகப் புனரமைக்கவோ திருத்தவோ இல்லை. நாம் வன்னியில் பயணித்த வீதிகளில் கடும் சிரமத்துடனேயே பயணித்தோம். இதில் விசித்திரம் என்னவென்றால் வடக்கின் வசந்தத்தின் கீழ் அந்த வீதியும் புனரமைக்கப்பட்டதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

வன்னிக்குச் சென்றிருந்த நாம் தர்மபுரம் ஊடாக விசுவமடுவுக்குச் சென்றோம். அரசின் கூர்ந்த கழுகுக் கண் பார்வை தற்போதும் அப்பகுதி மக்களது வாழ்க்கையைக் கூர்ந்து கண்காணித்த வண்ணமே உள்ளது. அந்த முக்கிய சந்தியில் நாம் தேநீர் அருந்திய தேநீர்ச்சாலை நிரந்தரக் கட்டடமாக அண்மையில்தான் உருமாறியுள்ளது. ஆனால், இராணுவ அதிகாரிகள் அந்தத் தேநீர்ச் சாலையை மூடிவிடுமாறு உரிமையாளரை வற்புறுத்தி வருகின்றனராம்.

அந்தக் கடையின் அருகிலேயே பாதை ஓரத்தில், பொருள்களை விற்றுத் தமது வயிற்றுப்பாட்டுக்கு நாலு காசு தேடிக் கொள்ளும் நடைபாதை வியாபாரிகளைக்கூட இராணுவத்தினர் அந்த இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்கிறார்கள் இல்லை. தற்போதும் அங்கு சகல செயற்பாடுகளும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழேயே மேற்கொள்ளப்படுகின்றன.

அது குறித்து நாம் விசாரித்தறிய முயன்ற போது அங்கிருந்த சிப்பாய் எமது அடையாள அட்டைகளைப் பரீட்சிக்க வேண்டுமென அடம் பிடித்தார். நாம் மறுத்தபோது எமக்குப் பின்புறமிருந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எம்மைச் சூழ்ந்து கொண்டனர்.

அங்கிருந்து ஒருவாறு புறப்பட்டு விசுவமடு இராணுவக் காவலரணை நாம் சென்றடைந்தவேளை, அங்கு மீண்டும் இராணுவப் பொலிஸார் எமது பயணத்தின் நோக்கம் குறித்துத் துருவித் துருவி விசாரித்தனர். ஒருவாறு அங்கிருந்து விடுபட்டு நாம் உடையார்கட்டு மகா வித்தியாலயத்தைச் சென்றடைந்தோம்.

நாம் பயணித்த வாகனம் உடையார்கட்டு மகா வித்தியாலய வாசலில் நிறுத்தப்பட்ட போது, காலணிகள் அற்ற வெற்றுக் கால்களுடன் மாணவர்கள் பாடசாலை முற்றத்தில் விளையாட்டிக் கொண்டிருந்தனர். அங்கு ஆரம்ப வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரை கற்றல் நடக்கிறது. அங்கு முன்னர் கல்வி பயின்ற மாணவர்களில் பலர் போரில் உயிரிழந்து விட்டனர்.

போர் 2009 மேயில் முடிவுக்கு வந்து விட்டாலும் கடந்த ஆண்டு ஜூலை மாதமே பாடசாலை மீண்டும் இயங்க ஆரம்பித்தது. போரில் தந்தையை அல்லது தாயை இழந்த மாணவர்கள் நூறுபேர் வரையில் அங்கு கல்வி கற்கின்றனர். இவர்களில் தந்தை, தாய் இருவரையும் ஒரு சேர இழந்த மாணவர்கள் ஜம்பது பேருக்கும் அதிகம்.

போரில் அகப்பட்டு உடல் அங்கவீனமுற்ற மாணவ, மாணவிகள் 50 முதல் 75 பேர் வரை அங்குள்ளனர். அந்த மாணவ மாணவிகளின் நலன்களைக் கவனித்துத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான எவ்வித செயற்பாடுகளும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை.

2011 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவ மாணவிகள் 200 பேர் வரை அங்குள்ளனர். கிடுகுகளால் வேயப்பட்ட தற்காலிகக் கொட்டகைகளிலேயே அவர்களுக்கான வகுப்புக்கள் நடக்கின்றன. அங்கு கல்வி கற்போர் தமக்கான இரண்டாவது மொழியாகச் சிங்களத்தைக் கற்க வேண்டுமென்ற கட்டாயம் இருப்பினும், சிங்கள மொழியைப் போதிப்பதற்கான ஆசிரியர்கள் எவரும் அங்கு தற்போது கடமையில் இல்லை. இந்த நிலையில், மாணவர்கள் சிங்களம் கற்க வேண்டுமென்ற அந்தக் கட்டாயப்படுத்தல்களால் என்ன பயன் விளைந்து விடப்போகின்றது.

இந்தப் பாடசாலையில் கல்வி கற்கும், போரில் பெற்றோரை இழந்த மாணவச் செல்வங்களுக்கு மீண்டும் அவர்களது தாயையோ, தந்தையையோ எம்மால் பெற்றுக் கொடுக்க இயலாது. அதேபோன்று இந்த மாணவர்கள் இறந்து போன தமது தாய் தந்தையரை பெற்றுத் தருமாறு உங்களை ஒருபோதும் கேட்கப் போவதும் இல்லை. ஆனால் அவர்களுக்கு அரசால் உதவ முடியும்.

மற்றொரு புறம் இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தத்தமது ஆயிரம் சொந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அநாதரவான இந்த மாணவர்களுக்குத் தம்மால் இயன்ற அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன், அன்பு காட்டி அரவணைத்து அவர்களை ஆற்றுப்படுத்தி கல்வி போதித்து வருகின்றனர். அவர்களால் எப்போதும் தொடர்ந்து அவ்விதம் செயற்பட இயலாது போகக்கூடும். என்றோ ஒரு நாள் அவர்கள் இப் பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைக்கு மற்றலாகிப் போக நேரிடும். இந்தச் சின்னஞ் சிறுவயதில் பெற்றோரின் இழப்பால் கண்ணீர் சிந்தியவாறு கல்வி கற்கும் சரோஜாக்களும் குமரன்களும் இந்த வன்னி மண்ணில் தனித்துத்தான் வாழ நேரிடும். அது அவர்களது தவறல்ல. அது இந்தப் பொல்லாத சமூக அமைப்பின் தவறே. அதற்காக இந்தச் சின்னஞ்சிறிசுகள் தமது எதிர்கால வாழ்வையே நட்ட ஈடாகச் செலுத்த வேண்டுமா?

போர் முடிவடைந்து இந்தப் பாடசாலை மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், இந்தப் பாடசாலைக்கு கல்வித் திணைக்களத்தாலோ, அல்லது அரசியல்வாதிகளாலோ குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு உதவி கிட்டியதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாணவர்களுக்குப் பயிற்சிக் கொப்பிகள் பகிர்ந்தளித்தாரம்.

ராஜபக்ஷமார். பயிற்சிக் கொப்பிகளையோ பேனாக்களையோ இந்தப் பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளிப்பதன் மூலம் இந்தப் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு அவர்கள் இழைத்த தவறுக்கு நட்ட ஈடு செலுத்தி சமப்படுத்திவிட இயலுமா? uthayan
« PREV
NEXT »

No comments