Latest News

January 10, 2012

எச்சரிக்கை! யாழில் மீண்டும் மலேரியா
by admin - 0

யாழில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் மலேரியாத் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது


கடந்த மூன்றாண்டுகளாக யாழ் மாவட்டத்தில் மலேரியாத் தொற்றுகள் இனங்காணப்படவில்லை. தற்போது இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியோர், இந்தியாவுக்கு சென்று வருபவர்கள், வெளிநாடு செல்வதற்காக முகவர்களுடாக ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள், அபிரிக்க நாடுகளில் வேலை செய்து விடுமுறையில் வருபவர்கள் போன்றோரில் தற்போது மலேரியா, மூளை மலேரியா போன்ற நோய்த் தாக்கம் இனங்காணப்படுவது அதிகரித்து வருகிறது.

அதே வேளை யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பூச்சியியல் ஆய்வுகளில் மலேரியா நோயைப் பரப்பும் நுளம்புகள் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இனங்காணப்பட்டுள்ளது. எனவே யாழ்ப்பாணத்தில் மலேரியா நோய் மீண்டும் பரவக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மலேரியா நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளில் பூச்சியியல் ஆய்வு, இரத்தக்கறைப் பரிசோதனை, புகையூட்டல், மருந்து தெளித்தல்,நுளம்பு வலை விநியோகம், நுளம்புக் குடம்பியை உண்ணக்கூடிய மீன்களை விடுதல் மற்றும் விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகள் சுகாதாரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ் குடாநாட்டில் மீண்டும் மலேரியா பரவாதவாறு கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் திணைக்களம் மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றது. இதற்காக பின்வரும் விடயங்களில் அவதானம் செலுத்துமாறு சுகாதாரத் திணைக்களம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

• இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியோர் மலேரியாவுக்கான இரத்தப் பரிசோதனையை அருகிலுள்ள அரச வைத்தியசாலையில் செய்து மலேரியா கிருமித்தொற்று இல்லையென்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

• இந்தியா அல்லது மலேரியா நோயுள்ள நாடுகளுக்கு சென்றுவர உள்ளவர்கள் மலேரியா நோய் ஏற்படாது பாதகாப்பதற்கான முற்காப்பு சிகிச்சையை அருகிலுள்ள அரச வைத்தியசாலை அல்லது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பெற்றுக் கொள்ளுங்கள்.

• வெளிநாடு செல்வதற்காக ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள் மலேரியாவுக்கான இரத்தப் பரிசோதனையை அருகிலுள்ள அரச வைத்தியசாலையில் செய்து மலேரியா கிருமித்தொற்று இல்லையென்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

• மலேரியா நோயுள்ள நாடுகள் அல்லது இலங்கையில் மலேரியா நோயுள்ள பகுதிகளுக்கு மலேரியா நோய்க்கான முற்காப்பு சிகிச்சை பெறாது சென்று வந்தவர்களுக்கு நடுக்கத்துடன் காய்ச்சல் ஏற்பட்டால் மலேரியாவுக்கான இரத்தப் பரிசோதனையை அருகிலுள்ள அரச வைத்தியசாலையில் செய்துகொள்ளுங்கள்.
« PREV
NEXT »

No comments