Latest News

January 24, 2012

அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால், இந்து ராமைத் தண்டியுங்கள்-ஜெ. வழக்கு
by admin - 0

முதல்வர் ஜெயலலிதா குறித்தும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர், இணை ஆசிரியர், நிருபர் மற்றும் இதே செய்தியை எடுத்துப் பிரசுரித்த இந்து நாளிதழின் ஆசிரியர் ராம், செய்தியாளர் கோலப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜெகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

முதல்வர் ஜெயலலிதா, சாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களாலும் மிகவும் மதிக்கப்படக்கூடியவராக இருக்கிறார். இதனால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து அவரை ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பு உள்ளது. இந்தநிலையில், முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி 7-1-2012 தேதியிட்ட `நக்கீரன்' இதழில் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டது.

அந்தக் கட்டுரையில் எழுதியிருப்பதுபோல, ஒருநாளும் எம்.ஜி.ஆர் மாட்டுக் கறி சாப்பிடவில்லை. முதல்வர் ஜெயலலிதாவும் ஒருபோதும் மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை. உண்மை இப்படி இருக்கையில், முதல்வர் மாட்டுக் கறியை சமைத்து பரிமாறினார் என்று மிகவும் அவதூறாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். உள்நோக்கத்துடன், முதல்வரின் நன்மதிப்பை குறைக்கும் வகையில் பொய் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

எனவே, இந்திய தண்டனைச் சட்டம் 499, 500, 501-வது பிரிவுகளின்படி, மேற்படி அவதூறு செய்தி வெளியிட்டது தண்டனைக்குரிய குற்றமாகும். உண்மை இல்லை என்று தெரிந்தும் அவதூறு செய்தி வெளியிட்ட குற்றத்திற்காக நக்கீரன் ஆசிரியர், இணை ஆசிரியர், நிருபர் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல இந்து ஆசிரியர் ராம், நிருபர் கோலப்பன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இன்னொரு அவதூறு வழக்கில்,

முதல்வர் ஜெயலலிதா பற்றி `நக்கீரன்' இதழில் வெளியான செய்தி சரியா, தவறா என்று தீர விசாரிக்காமல், வேண்டுமென்றே `இந்து' பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

பொதுவாழ்க்கையில் உள்ள ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி செய்தி எழுதும்போது அந்த செய்தி சரியா, தவறா? என்று விசாரித்து அறிய வேண்டும். ஒவ்வொரு நபரும் தனது சொந்த வாழ்க்கை மற்றும் குடும்பத்தைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு உரிமை உண்டு.

அவர்களது ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை செய்தியாக வெளியிடக்கூடாது என்று ஆர்.ராஜகோபாலன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.

இந்தநிலையில், முதல்வர் ஜெயலலிதா பற்றி நக்கீரன் இதழில் வெளியான செய்தியைப் பற்றி தீர விசாரிக்காமல், பொய்யான, விஷமத்தனமான, களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செய்தி வெளியிட்ட `இந்து' பத்திரிகை ஆசிரியர் மற்றும் நிருபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments