Latest News

January 01, 2012

அ.தி.மு.க.,வில் பரபரப்பாகும் "உண்மை விசுவாசி'
by admin - 0

அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அமைச்சர்கள் முதல் உறுப்பினர்கள் வரை பெரும்பாலானோர், "உண்மை விசுவாசி' என்ற வார்த்தையை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதனால், அ.தி.மு.க.,வில் "உண்மை விசுவாசி' பிரபலமாகியுள்ளது.

சசிகலாவின் ஆதரவில் கட்சியில் கோலோச்சி வந்த பலரும், தங்களது முகாம்களை மாற்றி வருகின்றனர். தங்களையும் கட்சியிலிருந்து நீக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில், சசிகலாவுக்கு எதிர்முகாமில் இருந்தவர்களை தேடிப்போய் நட்பு வைக்க முயற்சிக்கின்றனர். சசிகலாவின் ஆதரவில் இருந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்படுவர் என, கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கட்சி நிகழ்ச்சிகள், கட்சி முக்கிய தலைவர்களின் விழாக்கள், அ.தி.மு.க.,வால் அங்கீகரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகியவற்றில், பாரபட்சமின்றி கட்சி பிரமுகர்கள் முண்டியடித்து ஆஜராகின்றனர். குறிப்பாக முதல்வர் பங்கேற்கும் விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு, ஏதாவதொரு வகையில் தங்களை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

சமீபத்தில் எம்.ஜி.ஆர்., நினைவு நாள் நிகழ்ச்சி வந்த போது, பலர் போட்டி போட்டுக்கொண்டு, "அம்மாவின் வழியில்' என்று கூறி போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தினர். இதேபோல், அ.தி.மு.க., பொதுக்குழு நிகழ்ச்சிக்கு வந்த முதல்வருக்கும், கட்சியினர் பல விதமான வரவேற்புகள் அளித்தனர். இதில், வரவேற்பு பேனர்கள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில், "அம்மாவின் உண்மை விசுவாசி' என்ற வாசகம் பெருமளவில் காணப்பட்டது. அமைச்சர்கள், மாவட்ட, வட்ட நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் என, அனைத்து தரப்பிலும் பெரும்பாலானோர், தங்களை "உண்மை விசுவாசி' என்ற அடைமொழியிலேயே குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து, அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது: அ.தி.மு.க., வில் ஜெயலலிதா புரட்சிகளை செய்து வருகிறார். கட்சியினர் அனைவரும், அவரது தலைமைக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். அம்மாவுக்கு பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடன் தொடர்பு வைக்க நாங்கள் தயாராக இல்லை. அதனால் தான் உண்மை விசுவாசி என்பதை, கொட்டெழுத்துகளில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விசுவாசமில்லாமல் ஒரு கூட்டம், முதல்வருக்கு கேடு நினைத்த நிலையில், நாங்கள் விசுவாசமானவர்கள் என்பதை, இப்போது கட்சித்தலைமைக்கு காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments