ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதா குறித்த சிறப்புக் கூட்டம் நேற்று மலை 3.45 மணிக்கு சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு,
கேள்வி: நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டுவிடும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். மத்திய அரசு மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
பதில்: மத்திய அரசு எங்களை 4 தடவை ஏமாற்றியுள்ளது. அதனால் தான் அரசின் மீது முழு நம்பிக்கை இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி கோடிக் கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அது இந்த அரசின் கண்ணில்படவில்லையா? நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் வரும் 27ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன். ஒருவேளை மசோதாவை நிறைவேற்றிவிட்டால், டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் எங்களது போராட்டத்தை கைவிட்டு, அதே மேடைக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை வரவழைத்து ரோஜாப்பூ கொடுத்து பாராட்டுவேன்.
பிரதமர் மன்மோகன்சிங் நல்ல மனிதர் தான். பல சந்தர்ப்பங்களில் அது நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ரிமோட் கண்ட்ரோல் வேறு கையில் இருக்கிறது. ரிமோட் கண்ட்ரோல் பலரிடமும் இருக்கிறது. சில மத்திய அமைச்சர்கள் தங்களை பிரதமர் போல நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். மசோதாவில் சி.பி.ஐ. கண்டிப்பாக இடம்பெற வேண்டும்
கேள்வி: ஜன் லோக்பால் மசோதாவில் சி.பி.ஐ.யை சேர்க்கும் விவகாரத்தில் அரசுடன் சமரசம் செய்து கொள்வீர்களா?
பதில்: இந்த விஷயத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடம் கிடையாது. சி.பி.ஐ.யில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். ஆனால் சி.பி.ஐ. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சி.பி.ஐ. எத்தனையோ வழக்குகளை விசாரித்துள்ளது. இதுவரை எந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியும் சிறைக்கு போனதில்லை. சி.பி.ஐ. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பல வழக்குகள் அமுக்கி வைக்கப்பட்டுள்ளன. சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு பிரிவை சேர்க்காத ஜன் லோக்பால் மசோதாவே தேவையில்லை.
கேள்வி: டெல்லியில் போராட்டம் நடத்தியபோது பல அரசியல் கட்சியினரை அழைத்து பேசவைத்தீர்கள். தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக கட்சியினரை அழைத்தீர்களா? அல்லது அழைத்து அவர்கள் வரவில்லையா?
பதில்: இந்த விவகாரத்தில் ஒரு சில கட்சிகளை பற்றி பேசக்கூடாது. ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் புத்தாண்டில் நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தின்போது, இந்த மசோதாவை எதிர்க்கும் எம்.பி.க்கள் வீட்டின் முன்பு 2,000 முதல் 5,000 பேர் கூடி முற்றுகை போராட்டம் நடத்துங்கள். சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. இருந்தாலும், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாமல் அகிம்சை வழியில் போராட்டம் நடத்த வேண்டும்.
கேள்வி: உங்கள் அமைப்பின் மத்திய செயற்குழுவில் மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே இருப்பதாகவும், ஏழைகள், தென்இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே?
பதில்: இந்த குற்றச்சாட்டை ஏற்க முடியாது. எங்கள் குழுவில் தமிழ்நாட்டின் சார்பில் சந்துரு இருக்கிறார். விரைவில் இந்த குழு விரிவுபடுத்தப்பட உள்ளது. அப்போது மகளிர், தலித், பழங்குடியினர் ஆகியோர் பிரதிநிதிகளாக இடம்பெறுவார்கள். நல்ல எண்ணத்துடன், களங்கம் இல்லாத பொதுவாழ்க்கை வாழ்பவர்களைத்தான் நாங்கள் தேர்வு செய்கிறோம். தென்மாநிலங்களுக்கான உறுப்பினர்களை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தேர்வு செய்து வருகிறார்.
கேள்வி: ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று `கெடு' விதித்திருக்கிறீர்களே, அதற்குள் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்: கோடிக்கணக்கான மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடப்பு கூட்டத்தொடரை நீட்டித்து, இந்த மசோதாவை நிறைவேற்றலாமே! இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு மக்களுக்கு உறுதி அளித்துள்ளது. அதனை நிறைவேற்றியே தீர வேண்டும் என்றார்.
இந்த பேட்டியின்போது கிரண்பேடி, இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயல்திட்டக்குழுவின் தமிழ்நாடு பிரதிநிதி சந்துரு, கோவா பிரதிநிதி தினேஷ் வகேலா ஆகியோர் உடன் இருந்தனர்.
அன்னாவைப் பார்க்க குவிந்த இளைஞர்கள்
முன்னதாக நடந்த கூட்டத்தில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டு 3.45 மணிக்கு துவங்கியது. ஆனால் 3 மணி முதலே இளைஞர்கள் மைதானத்தில் குவியத் துவங்கினர். மாலை 4 மணிக்கெல்லாம் மைதானம் நிரம்பி வழிந்தது. மாலை 5.10 மணி அளவில் அன்னா பேசினார்.
அவர் இந்தியில் பேசத் துவங்கியதும் கூட்டத்தில் இருந்தவர்கள் அதை உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்க்குமாறு கூறினர். ஆயினும் யாரும் மொழிபெயர்க்கவில்லை. அவர் தொடர்ந்து இந்தியில் பேசினார். இந்தி தெரிந்தவர்கள் மட்டும் அவரது பேச்சைக் கேட்டு கைதட்டினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அன்னா பேசி முடித்ததும் அதை தமிழில் சுறுக்கமாகக் கூறுவதாக அறிவிக்கப்பட்டது. அதை பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளாததால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.
இதைப் பார்தத் கிரண்பேடி அன்னாவின் பேச்சு உடனுக்குடன் தமிழ் மொழிபெயர்க்கப்படும் என்று கூறியதையடுத்து பார்வையாளர்கள் அமைதியாக இருந்தனர்.
கூட்டம் துவங்கும் முன்பு கிராமியக் கலைகளான தப்பாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஊழலுக்கு எதிரான ஓரங்க நாடகம், தேசபக்திப் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கூட்டதிற்கு வந்த சிலர் தங்கள் முகத்தில் தேசியக் கொடியை வரைந்திருந்தனர். இதனால் கூட்டம் நடந்த மைதானத்தில் முகத்தில் தேசியக் கொடி வரைபவர்கள் சிலர் வர்ணத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
No comments
Post a Comment