Latest News

December 19, 2011

எம்.ஜி.ஆர்., கைப்பட எழுதிய அறிவுரை!
by admin - 0

கடந்த, 1979ம் ஆண்டு, மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில், பவழ விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர்., பார்வையாளர் குறிப்பேட்டில் நீண்டதொரு கருத்தை, தன் கைப்பட எழுதினார்.
சாதாரணமாக ஒரு விழாவில் கலந்து கொள்ளும் வி.ஐ.பி.,க்களிடம், அந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், தங்கள் நிறுவன பார்வையாளர் புத்தகத்தை நீட்டி, கருத்தை எழுதச் சொல்வது வழக்கம். அவர்களும் பெயருக்கு ஏதோ இரண்டு வரி பாராட்டி எழுதி, கையொப்பமிடுவதை கண்டிருக்கிறோம்.
ஆனால், முதல்வர் எம்.ஜி.ஆர்., மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி பவழ விழாவில் மேடையில் அமர்ந்திருந்த போது, வழக்கம் போல் பள்ளி நிர்வாகத்தினர், பார்வையாளர் பதிவேட்டை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தனர். அப்போது, மேடையில் சக அமைச்சர்கள் நாஞ்சில் மனோகரன், காளிமுத்து, அரங்கநாயகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி கொண்டிருந்தனர்.
அவர்களுடைய பேச்சை உன்னிப்பாக கேட்டுக் கொண்டே, பார்வையாளர் புத்தகத்தையும் புரட்டி பார்த்து, ஏற்கனவே இதற்கு முன் பள்ளிக்கு வருகை தந்த வேறு தலைவர்கள் எழுதிய குறிப்புகளை படித்துவிட்டு, பிறகு, எம்.ஜி.ஆர்., தன் சட்டை சைடு பாக்கெட்டில், எப்போதும் வைத்திருக்கும் பேனாவை எடுத்து, எழுத ஆரம்பித்தார்.
கொஞ்சம் எழுதுவதும், மேடையில் மற்ற பேச்சாளர்களின் பேச்சை கேட்பதும் என, இரண்டு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருந்தார். இடையிடையே அருகில் இருந்தவர்களிடம் ஏதோ பேசி, ஜோக் அடித்து சிரித்து, ஜாலி மூடில் இருந்தார்.
விழா இறுதியில் அவர் பேச வேண்டிய நேரம் வந்த போது, சரியான நேரத்தில் எழுதி முடித்து, கையொப்பமிட்டு, நிர்வாகியிடம் கொடுத்தார். நிர்வாகத்தை பாராட்டியும், அதே நேரத்தில் மாணவர் களுக்கு அறிவுரை வழங்கியும் பேசினார்.
நிகழ்ச்சி முடிந்த பின், நேராக காருக்கு செல்லாமல், மேடையை விட்டு கீழே இறங்கியவர், பாதுகாப்பு வளையத்தை மீறி, பார்வையாளர் பகுதிக்கு சென்று விட்டார்.
அங்கு நின்று கொண்டிருந்த என்.சி.சி., மாணவர்கள் மற்றும் சிறுவர்களிடம் தோளைத் தட்டியபடி, கேஷûவலாக பேசி, அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்.
பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் மட்டுமே மேடையில் அனுமதிக்கப்பட்டு, எம்.ஜி.ஆரை அருகில் பார்க்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலரும் எம்.ஜி.ஆரை அருகில் நெருங்கி பார்க்க ஆசைப் பட்டாலும், பாதுகாப்பு காரணமாக போலீசார் நெருங்க விடுவதில்லை.
இதை எம்.ஜி.ஆர்., அறியாமலா இருப்பார்! அதனால்தான், விழா முடிந்ததும், அவர்களை நோக்கி சென்று, அருகில் நின்று, மாணவர்களை தொட்டு பேசியதை யாரும் ஜென்மத்தில் மறக்க மாட்டார்கள். இது தான், மற்ற தலைவர்களிடமில்லாத எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள தனி சிறப்பு.
விழா முடிந்த பின், எம்.ஜி.ஆர்., தன் கைப்பட எழுதிய அந்த எழுத்தை பார்க்க ஏகப்பட்டோர் விரைந்தனர். அதை பாதுகாப்பது பெரும்பாடாய் போய் விட்டது. அப்படி அன்று என்னதான் எழுதினார் என்பதை, நம் வாசகர்களுக்காக அதன் பிரதி எடுத்து வெளியிட்டுள்ளோம்.

« PREV
NEXT »

No comments