Latest News

December 09, 2011

ஒஸ்தி- சினிமா விமர்சனம்
by admin - 0

இந்தியில் வெளியான தபாங் படத்தின் அப்பட்டமான தழுவல் இந்தப் படம். வரிக்கு வரி வசனங்களில் கூட மாற்றமில்லை.

ஆனால் பாருங்கள், ஒரு காட்சி கூட படத்தில் ஈர்ப்புடன் இருக்கவில்லை என்ற உண்மையை முதலிலேயே சொல்லியாக வேண்டும்.

உலகிலேயே அற்பமான சமாச்சாரம் எது தெரியுமா... சுயதம்பட்டம்தான்!. தமிழ்நாட்டில் மட்டும் அதற்கு தன்னம்பிக்கை என்று பெயர் வைத்துவிட்டார்கள், டி ராஜேந்தரும் அவர் மகன் சிம்புவும். படம் முழுக்க தான்தான் உலகத்திலேயே ஒஸ்தி என்கிற ரேஞ்சுக்கு 'ஒஸ்தி வேலன், ஒஸ்தி வேலன்...' என தாங்க முடியாத சுயபுராணம்!.

'காமெடி என்ற பெயரில் கோபத்தைக் கிளப்பாதடா' என்று அடிக்கடி மயில்சாமியைப் பார்த்து சந்தானம் கூறுவார். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இதையே சிம்பு வரும் காட்சியில் திருப்பிக் கூறுகிறார்கள்!

கதை என்று சொல்ல இந்தப் படத்தில் ஒன்றுமே இல்லை. தடி எடுத்த தண்டல்கார போலீஸ் கதை இது. அவ்வளவுதான். மற்ற கேரக்டர்கள் எல்லாம் ஊறுகாய்.


படம் முழுக்க மொத்த வசனமும் சிம்புவுக்குதான். ஹீரோயினுக்கு மிஞ்சிப் போனால் 5 வரிகள்!

பேச்சோடு நிற்காமல், படம் முழுக்க பறக்கிறார், குதிக்கிறார், தாவுறார், கத்துறார், நெல்லை பாஷை என்ற பெயரில் தமிழைக் குத்திக் குதறியெடுக்கிறார்... துப்பாக்கியில் சுடுவது கூட நின்றபடியல்ல... வானத்தில் பறந்தபடிதான் சுடுகிறார். இதெல்லாம் போக எங்கோ ஓரிரு காட்சிகளில் அவர் நடப்பது போலவும் காட்டுகிறார்கள். தியேட்டரில், இதைக் காணச் சகிக்காமல் பலரும் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தது தனிக் கதை!


படத்தில் பார்க்கும்படி இருப்பவர் ஹீரோயின் ரிச்சாதான். ஆனால் அவர் முகத்தைக் கொஞ்ச நேரம், தொப்புளை மீதி நேரமும் காட்டிக் கொண்டே இருக்கிறார்களே தவிர, நடிக்க துளியூண்டு சந்தர்ப்பம் கூட தரவில்லை. அட... டூயட்டில்கூட சிம்புதான் குதிக்கிறார், ரிச்சா அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்!

தபாங் என்ற படம் உத்தரப் பிரதேச வட்டார இந்தி வசனத்துடன் வெளியானது. அதில் சுல்புல் பாண்டே என்ற பெயரில் சல்மான் கான் தனக்கு நன்கு தெரிந்த இந்தி வழக்கு மொழியை சரளமாகப் பேசியிருப்பார். ஆனால் இந்தப் படத்திலோ, அத்தனை கேரக்டர்களும் திருநெல்வேலித் தமிழ் என்ற பெயரில் ரசிகர்களை படுத்தி எடுக்கிறார்கள். யாருக்குமே அந்த வழக்கில் பேசத் தெரியவில்லை. இந்த பாவத்தைச் செய்யாத ஒரே ஆள் சந்தானம் மட்டுமே!



இன்னொரு விஷயம், இந்திக்காரர்களுக்கு தடாலடி போலீஸ் கேரக்டர் படங்கள் ரொம்ப புதுசு. அதனால் தபாங்கிற்கு அபார வரவேற்பு அங்கே.

தமிழில் நாம் பார்க்காத போலீஸ் கதையா... மூன்று முகம் ரஜினி, இதுதாண்டா போலீஸ் ராஜசேகர், சாமி விக்ரம் என விதவிதவிதமான அதிரடி போலீஸ் கதைகளை நாம் பார்த்துவிட்டோம். அந்தக் கதைகளுக்கு முன் இந்த ஒஸ்தி... ப்ச்!

படத்தில் உண்மையிலேயே பெரிய உழைப்பைக் கொடுத்திருப்பவர் இளம் இசையமைப்பாளர் தமன். ஆனால் அதுகூட பாடல்களில் மட்டும்தான்... பின்னணி இசையில் ஒஸ்தி ஒஸ்தி என்று கத்தி காதை பதம் பார்க்கிறது கோரஸ்.

சினிமா என்பது பொழுதுபோக்கு சமாச்சாரம்தான். அந்த பொழுதுபோக்கை பார்ப்பவர்களுக்கு சங்கடமில்லாத வகையில் இதமாகத் தருவது ஒரு கலை. தில், தூள், கில்லியில் அதை அற்புதமாகச் செய்திருந்தார் தரணி.

அந்த தரணி இயக்கிய படமா இது என்று கேள்வி படம் பார்த்துவிட்டு வந்த பிறகும் நெடு நேரம் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது!
« PREV
NEXT »

No comments