முல்லைப் பெரியாறு அணையின் தமிழக உரிமை காக்க வலியுறுத்தி தேனியில் வைகோ தலைமையில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 7,000 பேர் பங்கேற்றனர். மிக பிரமாண்டமாக நடந்த இந்தப் போராட்டத்தில் விவசாயிகள், வர்த்தகர்கள், மாணவர்கள், வேன்- ஆட்டோ டிரைவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெருமளவில் பங்கேற்றனர். இதனால் உண்ணாவிரதம் நடந்த மதுரை ரோடு ஸ்தம்பித்தது.
கூட்டத்தில் பேசிய வைகோ, முதலில் கம்பத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த உண்ணாவிரதத்தை தேனிக்கு இடம் மாற்றியது ஏன் என்பதற்கு விளக்கமும் தந்தார். அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கம்பம், கூடலூர் பகுதி மக்கள் உணர்ச்சிவசப்பட்டு நிற்கின்றனர். இந்நிலையில், நாங்கள் கம்பத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால், மக்களை தூண்டி விட்டது போலாகி விடும். இதற்காகவே உண்ணாவிரத போராட்டத்தை தேனிக்கு மாற்றினேன். போலீஸ் 144 தடை உத்தரவு போட்டதால் மாற்றவில்லை.
அணை வலுவாக உள்ளது என்று வல்லுநர்கள் தெரிவித்த பின்பும், கேரள அரசு பிடிவாதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இந்தப் பிரச்சனையில் கேரள அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், கேரளத்தின் மீது பொருளாதார முற்றுகையிட வேண்டும்.
தமிழகத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் 13 சாலைகளையும் அடைக்க வேண்டும். முதல்கட்டமாக வரும் 21ம் தேதி தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள சாலைகளில் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.
No comments
Post a Comment