Latest News

November 17, 2011

அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்? எதிர்கொள்ளத் தயார் என்கிறது ஈரான்
by admin - 0

லிபியாவில் போர் மேகங்கள் கலைந்துகொண்டிருக்கும் நிலையில், அடுத்து சிரியாவையா பாகிஸ்தானையா சூழும் என்ற விவாதங்களுக்கு இடையில் தற்போது ஈரானை அது சூழத்தொடங்கியுள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் ஈரான் நாட்டு அணு உலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனை பிரித்தானிய டெய்லி மெய்ல் பத்திரிகையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானிடம் நான்கு அணுவாயுதங்களை தயாரிப்பதற்கு போதுமானவளவு, செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் யுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஈரானிய நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தவதற்கான திட்டத்தை அமெரிக்கா முன்னெடுக்கும் என பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர் எனவும் அமெரிக்கா வலியுறுத்தினால் எந்த நடவடிக்கைக்கும் பிரித்தானிய இராணுவ உதவியை அமெரிக்கா பெறும் என பிரித்தானிய இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிரித்தானிய கார்டியன் பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை இந்து சமுத்திரத்திலுள்ள பிரிட்டனின் கட்டுப்பாட்டிலுள்ள தீவான டியாகோ கார்ஸியாவிலிருந்து தக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அனுமதி கோரும் என பிரித்தானிய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அத்தீவில் கடற்படைத் தளமொன்றை கொண்டுள்ள அமெரிக்கா அதை முந்தைய மத்திய கிழக்கு மோதல்களின் போது பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் இகுட் பராக் ஆகியோர் ஈரான் மீதான தாக்குதலுக்கு ஆதரவான நிலையில் இருப்பதாகவும், பிற அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் பெஞ்சமின் நேதன்யாகு ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. முதலில் இந்தத் தாக்குதல் திட்டத்தை எதிர்த்து வந்த வெளியுறவு அமைச்சர் அவிட்கர் லிபர்மேன் இப்போது அதை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து வரும் 8ம் திகதி சர்வதேச அணு ஆராய்ச்சி அமைப்பு தாக்கல் செய்யவுள்ளது. அப்போது ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்புகள் எந்த நிலையில் உள்ளன என்பது தெளிவாகும். அதன் அடிப்படையில் ஈரானைத் தாக்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.
இப்போதுள்ள நிலையில் அணு ஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை தேவைப்படும் என அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுப் பிரிவுகள் கருதுகின்றன. இதனால் ஆயுதத் தயாரிப்பை இப்போதே தடுத்து நிறுத்த, அதன் அணு ஆராய்ச்சி மையங்களைத் தாக்கி அழிக்க இஸ்ரேல் கருதுகிறது. ஆனால், தனது பெரும்பாலான அணு ஆயுத ஆராய்ச்சி மையங்களை ஈரான், நிலத்துக்கடியில் வைத்துள்ளது. மலைகளைக் குடைந்து, மிக ஆழத்தில் இந்த மையங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.ஈரானின் புனித நகரான குவாம் அருகே உள்ள போர்டோ என்ற இடத்தில் மலையைக் குடைந்து, பூமிக்கு அடியில் மிகப் பாதுகாப்பான இடத்தில் அந் நாட்டின் முக்கிய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. மின்சார உற்பத்திக்காகவும், புற்றுநோய் சிகிச்சைக்காகவும் அணு ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளதாகவும், அங்கு யுரேனியத்தை சுத்தப்படுத்தி வருவதாகவும் ஈரான் கூறுகிறது.

மருத்துவ ஆராய்ச்சிக்காக யுரேனியத்தை 3.5 சதவீதம் அளவுக்கே சுத்தப்படுத்துவதாக ஈரான் கூறினாலும் அதை 20 சதவீதத்துக்கும் அதிகமாகவே சுத்தப்படுத்தி வளப்படுத்தி வருவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறுகின்றன. அணு ஆயுதங்கள் தயாரிக்க யுரேனியத்தை மிக அதிகளவில் வளப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஈரான் மீது நாம் தாக்குதல் நடத்துவதை விட அமெரிக்கா தாக்குதல் நடத்துவதே சிறந்தது என பாதுகாப்பு வழிமுறைகளுக்கான இஸ்ரேலிய அமைச்சர் மோஷே யா லோன் கூறியுள்ளார். அதே போல உள்துறை அமைச்சரான எலி இஸ்ஹாய், இந்தத் தாக்குதல் திட்டம் தொடர்பான தனது முடிவை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

ஈரானிடம் சுமார் ஒரு இலட்சம் ஏவுகணைகள் உள்ள நிலையில், இஸ்ரேலால் அவ்வளவு எளிதாக ஈரானைத் தாக்கிவிட முடியாது என்கிறார்கள். இந்நிலையில், எந்நேரத்திலும் ஈரான் யுத்தத்துக்கு தயாராகவுள்ளதாகவும், இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகள் தாக்கினால் திருப்பித் தாக்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி அக்பர் சாலி அறிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை லிபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அலி அக்பர் சலேஹ், மேற்படி செய்திகள் குறித்து துருக்கி நாட்டு ஊடகமொன்றுக்கு பதிலளிக்கையில், எந்த அச்சுறுத்தலையும் ஈரான் தண்டிக்கும் எனக் கூறினார். சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதில் துரதிஷ்டவசமாக, அமெரிக்கா தனது மதிநுட்பத்தை இழந்துவிட்டது என்றும் அது பலத்தில் மாத்திரமே தங்கியுள்ளது. ஆனால் ஈரானுக்கு எதிராக மோதலில் ஈடுபடுவற்கு முன் அவர்கள் இரு தடவை சிந்திப்பார்கள் என நம்புகிறோம் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சலேஹ் கூறினார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இஸ்ரேலிடம் இருந்து கடந்த 8 வருட காலத்துக்கும் மேலாக எமக்கு அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. எங்களுடைய கொள்கை இஸ்ரேல் தவிர உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதுதான். எமது நாடு ஒற்றுமையானது. எமக்கு இத்தகைய அச்சுறுத்தல்கள் புதியதல்ல. எந்தவொரு நாடும் எம்மைத் தாக்க முயன்றால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும், நாம் எதற்கும் பின் நிற்கப்போவதில்லையென்பதுடன் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள எம்மால் முடியும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஈரானுக்கு மேற்குப்புறத்திலுள்ள ஆப்கானிஸ்தானில் 98,000 அமெரிக்கப் படையினர் நிலைகொண்டுள்ளனர். கிழக்கிலுள்ள ஈராக்கில் 43,500 அமெரிக்கப் படையினர் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 10,000 பிரித்தானிய துருப்பினரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments