2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
அவருடன் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார், சினியுக் பிலிம்ஸ் கரீம் மொரானி, குஸோகான் நிறுவன இயக்குநர்கள் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் உள்ளிட்டோருக்கும் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கலைஞர் டிவி தொடர்பான ரூ 200 கோடி பணப் பரிவர்த்தனையில் கனிமொழி சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி, கடந்த மே 20-ம் தேதி அவரை கைது செய்தது சிபிஐ. கடந்த 7 மாதங்களாக அவர் 5 முறை ஜாமீனுக்கு விண்ணப்பித்திருந்தார்.
முதல் நான்கு முறையும் அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில் கூட தனது ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்ததால், உயர்நீதிமன்றத்தை கனிமொழியும் மற்றவர்களும் நாடினர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் 5 பேருக்கு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியதையடுத்து தங்களுக்கும் ஜாமீன் கிடைத்துவிடும் என்று கனிமொழி உள்ளிட்டோர் நம்பினர். இதனால் டிசம்பர் 1-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய வழக்கை முன்னதாகவே விசாரிக்குமாறு கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர்.
இவர்களது ஜாமீன் மனுக்கள் தொடர்பாக வெள்ளிக்கிழமையும், இன்றும் விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி விகே சஹேலி கூறுகையில், “முன்பு 5 அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கியபோது, சிபிஐ 409வது பிரிவின்கீழ் (நம்பிக்கை துரோகம்) பதிவு செய்த குற்றச்சாட்டு குறித்து எதுவும் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் கவனக்குறைவு என்று இதை சொல்ல முடியாது. ஆனால் ஏன் இதை கவனத்தில் கொள்ளவில்லை என்பது புரியவில்லை,” என்றார்.
உடனே எழுந்த கனிமொழியின் வழக்கறிஞர் அல்டாப், “மதிப்புக்குரிய உச்சநீதிமன்றம் இதை கவனிக்கவில்லை என்று கூறமுடியாது, உச்சநீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டே அந்த தீர்ப்பினை வழங்கியது. அதுவே கனிமொழிக்கும் மற்றவர்களுக்கும் பொருந்தும்,” என்று கூறி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் இரண்டு முக்கிய பத்திகைளை வாசித்துக் காட்டினார்.
விசாரணையின் முடிவில் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு திமுக தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
No comments
Post a Comment