பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி மேற்கொண்டுள்ள ரத யாத்திரை தற்போது ராஜஸ்தானை அடைந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அத்வானி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "சோனியாவின் இந்த மவுனம், ஊழல் ஒழிப்பின் அவரது இயலாமையைக் காட்டுகிறது. மேலும், ஊழலில் இவருக்கும் பங்கு இருக்குமோ என்ற சந்தேகத்ததையும் கிளப்புகிறது.
ஒவ்வொரு மாநிலம், மாவட்டங்கள், நகரங்கள் என மூலை முடுக்களில் எல்லாம், ஊழல் என்பது ஒரு விவாதப் பொருளாக இன்று திகழ்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா மட்டும் இந்த விஷயத்தில் வாயைத் திறப்பதில்லை. மௌனியாக இருக்கிறார்.
ஏன் ஊழலுக்கு எதிராக ஒட்டுமொத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பிரதமரைப் பொருத்த அளவில் சொல்ல வேண்டுமென்றால், திமுக அமைச்சர்கள் தாங்கள் செய்தது பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் என்று கூறுகின்றனர். இந்த விஷயத்தில் சோனியா தனது மௌனத்தை உடைத்து வெளிவரவேண்டும், என்றார் அத்வானி.
சில நாட்களுக்கு முன்னர் உத்தர்கண்ட்டில், சோனியா கலந்து கொள்ளாத ஒரு கூட்டத்தில் அவரது உரை ஒன்றைப் படித்தனர். அதில், வெறும் பேச்சினால் மட்டும் ஊழலைக் கட்டுப்படுத்திட முடியாது என்று சோனியா கூறியிருந்தார். அது குறித்து கேள்வி எழுப்பிய அத்வானி, உண்மைதான். நானும் ஒப்புக் கொள்கிறேன். பதிலுக்கு நானும் கேட்கிறேன்... ஒரு சக்திவாய்ந்த தலைவராக உள்ள சோனியா, ஊழலுக்கு எதிராக ஏதாவது பேசவாவது செய்திருக்கிறாரா? ஊழலைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார்.
No comments
Post a Comment