Latest News

November 12, 2011

அமைச்சர் டக்ளஸ்- இந்தியப் பிரதமர் சந்திப்பு!
by admin - 0

மாலைதீவில் நடைபெற்ற சார்க் 17 ஆவது உச்சி மாநாட்டில் விஷேட பிரதிநியாகக் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களிடையே நிலவி வரும் பிணக்குகளுக்கு அவசரமாக தீர்வு காண வேண்டிய அவசியம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இரு தரப்பு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் நேரில் சந்தித்து பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என்றும்- இதேவேளை இலங்கை இந்திய அரசுகளும் இணைந்து பேசி இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
இது தவிர இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய தமிழ் மக்களுக்கு இந்திய அரசால்
வழங்கப்படும் வீடமைப்புத் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வீடமைப்பு வசதிகளை பெற வேண்டிய பயனாளிகளான உரிமையாளர்களுக்கு நேரடியாகவே அதற்கான நிதியினை இந்திய அரசு வழங்குவதன் மூலம் இத்தேவைக்குரிய தமிழ் மக்கள் முழுமையாகவும் விரைவாகவும் வீடமைப்பு வசதிகளை பெற முடியும் என்றும் அதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதே சிறந்த வழிமுறை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்து விளக்கினார்.


இதன் மூலம் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியினையும் வீடமைப்பு வசதிகளை பெற வேண்டிய பயனாளிகளான உரிமையாளர்களே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எடுத்து விளக்கப்பட்டது.
பிரதானமாக தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசுகையில்- நாடாளுமன்ற தெரிவுக் குழுவிடம் இந்த விடயம் ஒப்படைக்கப்பட்டிருப்பது ஆரோக்கியமான விடயம் என்றும் குறிப்பிட்ட கால அவகாசத்தை நிர்ணயித்து செயற்படவிருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் யோசனைகள் மூலம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு- அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதன் மூலம் தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு தொடர்ந்தும் தேவை என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை அரசியலுரிமை பிரச்சினையை தீர்ப்பதில் தெளிவற்ற நிலையில் தொடர்ந்தும் இருந்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நடைமுறைச் சாத்தியமான இவ்வழிமுறையில் இணைந்து கொள்வதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைக்கான தீர்வு நோக்கிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்ற விடயத்தையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் எடுத்துக் கூறியுள்ளார்

அரசாங்கத் தகவல் திணைக்களம்
« PREV
NEXT »

No comments