Latest News

August 01, 2011

கரைவலை உரிமம் பறிபோனது'- முல்லை.மீனவர்
by admin - 0

இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவுப் பிரதேசத்தில் கரைவலை தொழிலில் ஈடுபட்டு வந்த தமிழர்களின் உரிமங்கள் சிங்கள மீனவர்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதேவேளை அங்கு தமிழர்கள் எவரும் கரைவலைத் தொழிலில் ஈடுபட அனுமதிக்கபடவில்லை என்றும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கொக்கிளாயிலிருந்து கொக்குத்தொடுவாய், நாயாறு, செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் முன்னர் இருந்த 44 ‘கரைவலை பாடுகளில்’ ஓரிரு பாடுகளுக்கே சிங்களவர்கள் உரிமம் வைத்திருந்துள்ளதாகவும் மற்றைய பாடுகளுக்குரிய உரிமத்தை தமிழர்களே வைத்திருந்ததாகவும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினரான முன்னாள் கல்வியதிகாரி அண்டனி ஜெகநாதன் சுட்டிக்காட்டுகின்றார்.
1984 இல் தமிழர்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டு, அங்கு சிங்கள மீனவர்கள் வரவழைக்கப்பட்டு கரைவலை உரிமங்கள் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகின்றார்.
முன்னர் இருந்த 44 பாடுகள் இன்று 150 ஆக அதிகரித்துள்ளதாகவும் அண்டனி ஜெகநாதன் தெரிவித்தார்.
கொக்கிளாய் பகுதிக்கு உரிம ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்ற தமிழ் மீனவர்கள், அங்கு சிங்கள முதலாளிமார் உரிமங்களை காட்டி தொழில் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டதாகவும் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
‘உரிமம் உள்ள சிங்களவர்கள் அனுமதிக்கப்பட்டனர்’- அமைச்சர்
அமைச்சர் ராஜித்த சேனாரத்ன
அமைச்சர் ராஜித்த சேனாரத்ன
ஆனால், இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சரான ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அந்தப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்து, விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த சிங்கள மீனவர்களுக்கு மாத்திரமே அங்கு மீண்டும் கரைவலைத் தொழில் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
அதுதவிர, தென்பகுதியில் இருந்து எவரும் புதிதாக அங்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தமிழர்களின் உரிமங்கள் சிங்களவர்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதிலும் உண்மை எதுவும் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை அவ்வாறு தமிழர்கள் எவருக்காவது உரிமம் இருந்து, அவர்கள் அங்கு கரைவலை தொழில் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டால், தன்னிடம் புகார் செய்யும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். BBC News
« PREV
NEXT »

No comments